சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கோயம்பேடில் 79 ஏக்கரில், 3,000 கடைகளுடன் காய்கறி, பழங்கள், பூக்கள் மொத்த விற்பனை அங்காடி வளாகம், கடந்த 1996ல் திறக்கப்பட்டது.
இங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, கூட்ட நெரிசலும், வாகன நெரிசலும் வெகுவாக அதிகரித்துஉள்ளது.
இங்கு கூட்ட நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை, சி.எம்.டி.ஏ., துவக்கியது. இதில் சில மாறுதல்கள் செய்து, கோயம்பேடு மார்க்கெட் மறுமேம்பாடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தனியார் கலந்தாலோசகர்கள் வாயிலாக, இதற்கான மாற்று வழிமுறைகள் கண்டறியப்பட்டு உள்ளன.
இதன்படி, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை நவீன வணிக பகுதியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.20 கோடி
இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட்டில், 79 ஏக்கரில், 27 ஏக்கர் பகுதியில் தான் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும், தரைதள கட்டடங்களாவும், சில இடங்களில் முதல் தளம் வரையும் மட்டுமே கட்டப்பட்டுஉள்ளன.
இங்கு, 42 ஏக்கர் பகுதி வாகன நிறுத்துமிடங்கள், திறந்தவெளி ஒதுக்கீடு, கிடங்குகள் போன்ற பயன்பாட்டில் உள்ளன.
இந்த பயன்பாட்டு வழிமுறையை நவீன முறையில் மாற்றி அமைக்கும் வகையில், 20 கோடி ரூபாயில் மறுமேம்பாட்டு திட்டம் உருவாக்கப்படுகிறது.
காய்கறி, பழங்கள் சில்லரை விற்பனைக்கு அடுக்குமாடி வளாகம் கட்டுவது, மற்ற வகை பொருட்களுக்கான சில்லரை விற்பனைக்கு தனி வணிக வளாகம் கட்டுவது, பொழுதுபோக்கு பகுதி, அலுவலக வளாகம், உணவகங்களுக்கான தனி வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக, மறுமேம்பாட்டுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்படுகிறது.
மேலும் 'ஸ்கை லைட்' வசதி ஏற்படுத்துவது, பொது மக்கள், வியாபாரிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக, 'ஸ்கைவாக்' போன்ற நவீன நடைபாதைகள் ஏற்படுத்தவும் இதில் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் நெரிசலைக் குறைக்க, கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்திலேயே மாற்றுத் திட்டங்கள் பரிசீலிக்கப் பட்டன.
இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை, மீஞ்சூர் ஆகிய இடங்களில், புதிய மார்க்கெட் வளாகங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
தேர்வு பணிகள்
இதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, சாத்தியக்கூறுகளை ஆராய, கலந்தாலோசகர் தேர்வு பணிகளும் துவங்கின.
ஆனால், இந்த மாற்று இடங்களில் நிலம் பெறுவதில், பிற துறைகள் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, கோயம்பேடு நெரிசலுக்குத் தீர்வாக, மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருமழிசையில், 40 ஏக்கரில் புதிய மார்க்கெட் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வீட்டுவசதி வாரியம் அல்லது வருவாய்த் துறையிடம் இருந்து இதற்கான நிலம் பெறுவதற்கான வழிமுறைகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!