சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில 'நல்லாசிரியர் விருது' போல், ஒவ்வொரு ஆண்டும் தினமலர் நாளிதழ் சார்பில் லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. வரப்பெறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில், தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தாண்டு மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதி தலைமையில் நடந்தது. வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு முன்னிலை வகித்தார்.

விருதுகள் வழங்கி சி.இ.ஓ., கார்த்திகா பேசியதாவது: ஆசிரியர் பணி என்பது ஒரு சேவை. மாணவர்களுக்கு ஒரு நாள் மட்டும் கற்பித்துவிட்டு செல்வது அல்ல. அவர்கள் வருங்காலத்தில் என்ன ஆவார்கள் என்பதை அறிந்து அவர்களின் திறமைக்கு ஏற்ப அதற்காக பயணிக்க வைக்கும் வகையில் ஒவ்வொரு ஆசிரியர்களின் செயல்பாடுகளும் இருக்க வேண்டும். ஆசிரியர் பணி, மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாகவும் அமைய வேண்டும்.
மாணவர்கள் எவ்வளவு படித்தாலும் அவற்றில் இருந்து மனதில் நிற்பது தான் கல்வி. சுடர்விளக்குகளான மாணவர்களை துாண்டிவிடும் பணியை ஆசிரியர்கள் எப்போதும் செய்ய வேண்டும். வகுப்பறையை தாண்டி ஒவ்வொரு மாணவர்களின் மனதில் நிற்பவர்களே ஆசிரியர்கள். அப்பணியை நீங்கள் சரியாக செய்ய வேண்டும். ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாக விருதுகளை வழங்கி வரும் தினமலர் நாளிதழை நாம் மனதார பாராட்ட வேண்டும்.

விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஒரு சாதனை நாளாக இந்நாள் அமையும். விருது பெற்ற ஆசிரியர்கள் இன்னும் கூடுதலாக சேவையாற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் மாறும் தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் கற்கும் ஆர்வம் வேண்டும். மாணவர் திறனுக்கு ஏற்ப கற்பிக்க வேண்டும். மாணவர்கள் கேள்வி கேட்டும் வகுப்பறைகளாக பள்ளிகள் மாற வேண்டும். ஆசிரியர்களுக்கு எப்போதும் தேடுதல் இருத்தல் வேண்டும். அதை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
ஆசிரியர்களின் பொதுநல சேவை
டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசுகையில், "தினமலர் சார்பில் ஆண்டுதோறும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜெயித்துகாட்டுவோம், உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு உதவும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். நேற்றுமுன்தினம் கூட தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்தினோம். எங்களுடைய பத்திரிகைப் பணி போன்றது தான் ஆசிரியர்களான உங்களுடைய பணியும். பொதுநல சேவை தான் நம் இருவரின் லட்சியம்.
இந்தியாவின் துாண்களாக இருக்கின்ற மாணவர்களை உருவாக்குவது நீங்கள் தான். ஒரு மாணவன் பள்ளிப்பருவத்தில் அதிக நேரம் ஆசிரியர்களிடம் தான் இருக்கிறான். அவனது நல்லொழுக்கம், நல்ல அறிவு எதுவாய் இருந்தாலும் அதில் உங்களின் பங்கு அதிகம். பாடம் நடத்துவதோடு கடமை முடிந்து விட்டதாக நினைக்காமல் அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்.
ஆசிரியர் வேலை புனிதமானது. அர்ப்பணிப்போடு பணிபுரிகிற ஆசிரியர்களை கண்டுபிடித்து கவுரவிப்பது தான் இந்த விருதின் நோக்கம். நல்ல மாணவர்களையும் சமுதாயத்தையும் உங்களால் உருவாக்க முடியும். அதற்கு பாடுபடுங்கள்" என்றார்.
விருது பெற்ற லட்சிய ஆசிரியர்கள்
1. அ.காந்தி, விஸ்வ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எழுமலை
2. அ.லட்சுமி, அரசு மேல்நிலைப்பள்ளி, டி.குன்னத்துார்
3. தி.சூசையம்மாள், ஆர்.சி.ஆரம்பப்பள்ளி ஞானஒளிபுரம், மதுரை
4. கு.வீரபத்திரன், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, கீழவாசல், மதுரை
5. கா.அன்புச்செல்வன், நாடார் மேல்நிலைப்பள்ளி தெற்குவாசல், மதுரை
6. இரா.ஜெயந்தி, நா.சு.வி.வி.சாலா தொடக்கப்பள்ளி, பட்டிவீரன்பட்டி
7. நா.ஜெகதீஸ்வரன், ஸ்ரீ ரேணுகா தேவி மேல்நிலைப்பள்ளி, நெய்க்காரபட்டி
8. ஏ.ஆர்.ஏ.எச். முபராக், சாதிக் அலிகான் அரசு மேல்நிலைப்பள்ளி, அகரம்
9. வி.மகாலிங்கம், எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அத்திக்கோம்பை
10. மு.ராணி, காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளி, திண்டுக்கல்
11. அ.சசிகலா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாச்சியார்புரம்
12. சு.நாகவள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி, ஆண்டிபட்டி
13. எஸ்.ஆர்.காளிதாசு, அரசு உயர்நிலைப்பள்ளி, தாமரைக்குளம்
14. மு.புரோஸ்கான் கே.ஜே.இ.எம்.மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி
15. ஜெ.ஜேம்ஸ் ஜெயசெல்வி மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தனுஷ்கோடி
16. ஜெ.ஜே.லியோன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னப்பாலம், பாம்பன்
17. கோ.சாந்தி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னஏர்வாடி
18. இ.ரமேஷ். அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி
19. ம.பிரபு, கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி, கல்லல்
20. சகாய சோபியா செலினா புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை
21. ரி.ஜான்சி புஷ்பலதா, ஆ.மு.அருணாசல நாடார் ஆரம்பப்பள்ளி, தளவாய்புரம்
22. இரா.பவுல், எஸ்.ஏ.வி.சாலா நடுநிலைப்பள்ளி, முதலிப்பட்டி
23. இரா.மாரியப்பன், நாடார் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்
24. சீ.முனீஸ்வரி, கலைமகள் தொடக்கப்பள்ளி திருத்தங்கல்
25. மு.நாராயணசாமி, இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி
வாசகர் கருத்து (4)
I really appreciate DINAMALAR for their wonderful work for the society. I love Dinamalar.
அதேபோல், வாக்களித்த மக்கள் மத்தியில் நிட்பவர்களே சிறந்த அரசியல்வாதிகள். சிறந்த அரசு. இப்ப ஆட்சிபுரியம் அரசும் மக்கள் மனதில் இருக்கிறார்கள் - ஆமாம், எப்படா இந்த ஊழல் அரசு ஒழியும் என்று மக்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தினம் தினம்.
மிக மிக அருமையான செய்தி. இந்த 25 பேரும் மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கான அடித்தளம் என்பதிலும் ஐயமில்லை. மாணவர்களின் கல்விக்கண்ணை திறக்கும் இந்த ஆசிரியர்களுக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள். அதே போல், ஆசிரியர்களின், கல்வியின், புரவலர்களாய் செயல்படும் தினமலர் நிர்வாகத்தினருக்கும், அதன் நிறுவன ஆசிரியர் பெருந்தகைக்களுக்கும் வாழ்த்துக்கள். கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை, இது போன்ற நல்ல செய்திகளை அடிக்கடி வெளியிட்டு விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தலாம்.
"மாணவர் மனதில் நிற்பவர்களே ஆசிரியர்கள்" - உண்மைதான். படிப்பை முடித்து பல ஆண்டுகள் ஆனாலும் ஆசிரியர்கள் நம் மனதில் இன்றும் நிற்கிறார்கள். பற்பல காரணங்களால் அந்த நிலை தற்போது குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த தினமலருக்கு வாழ்த்துக்கள்.