ஐ.எஸ்.ஐ., ஆதரவு பயங்கரவாதி கைது
சண்டிகர், பாகிஸ்தானின், ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதியை, பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து சக்தி வாய்ந்த, 'டிபன் பாக்ஸ்' வெடிகுண்டு மற்றும் ஆயுத குவியல்கள் கைப்பற்றப்பட்டன.பஞ்சாபின், டார்ன் டரன் மாவட்டத்தின் ரஜோக் கிராமத்தைச் சேர்ந்த யோக்ராஜ் சிங் என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து நிரப்பப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.மேலும், இரண்டு ஏ.கே., 56 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், 2 கிலோ ஹெராயின் போதைப் பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் ரிண்டா, ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் கும்பலின் அறிவுறுத்தலின்படி, ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் யோக்ராஜ் சிங் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.இவர்கள் அனைவரும் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் செயல்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது.அடுத்தடுத்த பண்டிகை காலங்கள் வருவதால், மிகப்பெரிய நாசவேலையில் ஈடுபட இந்த கும்பல் திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையில் மேலும் பல பயங்கரவாதிகள், ஆயுத குவியல்கள், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!