வடகிழக்கு பருவமழையை சமாளிக்குமா சென்னை?

சென்னையில் கடந்தாண்டுகளில் வடகிழக்கு பருவமழையின் போது, மழை நீர் தேங்கி வெள்ளக்காடானது. மழை நீர் வடிந்து செல்ல இடமில்லாத சூழலில், பல நாட்கள் வெள்ளம் தேங்கி மக்களை முடக்கியது. இந்நிலையில், மழை நீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துதல், மழை நீர் தேங்குவதை தடுத்தல் போன்றவற்றுக்காக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருபுகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்து உள்ளது.
அதன்படி, மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன; 144 இடங்களில் இணைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர் என பலரும், பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி வருகின்றனர். அதேநேரம், மழை நீர் கட்டமைப்புகள் குறித்து, புவியிட தகவல் வல்லுனர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

சென்னை மாநககராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், முன்னுரிமை அடிப்படையில் இரண்டு கட்டமாக பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்ட திட்டப் பணிகள் ஏறத்தாழ முடிந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக தி.நகர் ராஜமன்னார் சாலை, சீத்தம்மாள் காலனி, கொளத்துார், ரிப்பன் மாளிகை, வேப்பேரி போன்ற பகுதிகளில் மழை நீர் அதிக நேரம் தேங்காது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாதவரம், பொன்னியம்மன்மேடு, சுற்றுவட்டார நகர் பகுதிகளில் இன்னும் மழை நீர் வடிகால் பணிகள் துவக்கப்படாததால், கடந்த மழையில் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில், நீர் இறைக்கும் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. இதே போல, ௪௦௦க்கும் மேற்பட்ட இடங்கள், நீர் தேங்கும் இடங்களாக அறியப்பட்டு, வெள்ள நீரை அகற்ற மோட்டார்கள் தயார் படுத்தப்பட்டு உள்ளன.
பணிகளின் நிலவரம்
l அடையாறு மண்டலத்தில் அடையாறு இந்திராநகர், காமராஜர் நகர், தரமணி பெரியார் நகர், பெசன்ட் நகர், சாஸ்திரி நகரில் பணி முடியவில்லை. அதேபோல் வேளச்சேரி, நேதாஜி நகர், பாலாஜி காலனி பிரதான சாலை, ஏ.ஜி.எஸ்., காலனி, விஜயநகர், ராம்நகர் பகுதிகளில் வடிகால் பணி முழுமையடையவில்லை
l கிண்டி வண்டிக்காரன் தெரு, மடுவாங்கரை, சிட்டிலிங் சாலை பகுதியில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி, துண்டு துண்டாக பணி நடைபெற்று வருகிறது
l கடந்த நான்கு ஆண்டுகள், பருவமழையின் போது வேளச்சேரி விஜயநகர் - பகிங்ஹாம் கால்வாயை இணைக்கும் மூடு கால்வாயில் மழை நீர் பின்னோக்கி பாய்ந்தது. மோட்டார் வாயிலாக நீரை இறைத்தனர். மூடு கால்வாயில் பின்னோக்கி பாயும் நீர், நேராக செல்லும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. மூடு கால்வாயை பராமரிப்பது யார் என, நெடுஞ்சாலைத் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் இடையே நிர்வாக பிரச்னை உள்ளது
l ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகள், 70 சதவீதம் முடிந்துள்ளன. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜெ.பி., எஸ்டேட், வசந்தம் நகர், கோவர்தனகிரி, பீட்டர்ஸ் காலேஜ் ரோடு, பருத்திப்பட்டு ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட இடங்களில், சிறு மழைக்கே மழை நீர் தேங்கி பாதிக்கும் நிலை உள்ளது. ஆவடி நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், ஆவடி மார்க்கெட் சாலை, கோபாலபுரம், சேக்காடு மற்றும் கவரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்படும்
l மாதவரம் மண்டலத்தில் 50 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிந்தாலும், அவற்றின் இணைப்பு பணிகள் முழுமையாக முடியாததால் புழல், காவாங்கரை, லட்சுமிபுரம், புத்தகரம், சூரப்பட்டு பகுதிகள் பாதிக்கப்படலாம்
l அம்பத்துார் மண்டலத்தில் ஒரகடம், புதுார், கள்ளிக்குப்பம், பாலாஜி நகர் மற்றும் கொரட்டூர் சுற்றுவட்டாரங்களிலும் வடிகால்கள் இணைக்கப்படாததால் அப்பகுதிகள் பாதிக்கப்படலாம்
l திரு.வி.க., நகர் மண்டலத்தில் புளியந்தோப்பு, பேப்பர் மில்ஸ் சாலை பகுதியிலும் மழை நீர் வடிகால் பணிகள் முடிவடையவில்லை.
புதிரான கால்வாய் திட்டம்
ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியிட தகவல் அமைப்பு துறை வல்லுனரும், கட்டுமான பொறியாளருமான தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது:
தற்போது கட்டப்படும் மழை நீர் வடிகால்களும், முறையாக திட்டமிடப்பட்டதாக தெரியவில்லை. நிலத்தின் புவியியல் அமைப்பு, நீரோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மழை நீர் வடிகால்களுக்கான வடிவமைப்பு உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.
தற்போது கட்டப்பட்டு வரும் மழை நீர் வடிகால்கள் எங்கிருந்து துவங்குகின்றன, எங்கு சென்று சேருகின்றன என்பது புதிராக உள்ளது.ஒரு தெருவில் இருக்கும் சிறிய அளவிலான கால்வாய், பெரிய கால்வாயில் சென்று சேர வேண்டும். அது, பிரதான நீர் வழித்தடங்களில் சென்று சேர வேண்டும்.
ஆனால், தற்போது கட்டப்படும் கால்வாய்கள், ஒன்றுக்கொன்று இணைப்பு இல்லாத நிலையில் காணப்படுகின்றன. சில இடங்களில், வெள்ள நீர் பிரதான நீர் வழித்தடங்களில் இருந்து, இந்த கால்வாய்கள் வழியே திரும்பி தெருக்களுக்கு வர வாய்ப்புள்ளது.ஒவ்வொரு தெருவிலுள்ள மக்களுக்கும், அப்பகுதி மழை நீர் கால்வாய்களின் அமைப்பு குறித்து தெளிவாக புரியும்படி, வரைபடங்கள் வெளியிடப்பட வேண்டும்.
தங்கள் பகுதியிலிருந்து கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் இடம், அது பெரிய கால்வாயில் எங்கு இணையும் என்பது போன்ற தகவல்கள், இன்னும் மக்களிடம் முழுமையாக சென்று சேரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்துகள் அதிகரிக்கும் அபாயம்
கட்டட அமைப்பியல் வல்லுனர் பி.பாலமுருகன் கூறியதாவது:மழை நீர் வடிகால்கள் கட்டப்படுமுன், அந்த பகுதிக்கான நில அமைப்பு வரைபடம் தயாரிக்க வேண்டும். இதன்படி, ஒரு பகுதியில் எந்தெந்த இடங்கள் மேடாக உள்ளன, எவை தாழ்வாக உள்ளன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த விபரங்கள் அடிப்படையில், தங்கு தடையின்றி வெள்ள நீர் வடிந்து செல்வதற்கான கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், சென்னையில் பெரும்பாலான இடங்களில், மழை நீர் வடிகால்கள் இணைய வேண்டிய பகுதிகளில், ௨ மீட்டர் இடைவெளி காணப்படுகிறது. இந்த இணைப்பு பணிகள் முடியாவிட்டால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேறுவது சிரமம்.
சென்னையில் தற்போதைய நிலவரப்படி, 30 சதவீத அளவுக்கு மழை நீர் வடிகால் பணிகள் முடியாத சூழல் உள்ளது. மழைக்காலம் துவங்கும் முன்பே பல இடங்களில், நடந்து செல்வோரும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். வடிகாலுக்கான கான்கிரீட் கட்டுமான பணிகள் முடிக்கப்படாவிட்டால், மழைக்காலத்தில் மக்கள் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (9)
ஒரு வருடத்தில் அடிப்படை கட்டமைப்பு வேலைகளை ஜீபூம்பா என்று மந்திரம் சொல்லி முடிக்க முடியாது. ஆண்டுகள் பல பிடிக்கும். இனி ஒவொவ்ரு வருடமும் இருப்பதை மேம்படுத்த வேண்டும். கடந்த ஆட்சி காலங்களில் வெள்ளம் வரக்கூடாது என்று யாகங்கள் நடத்தி தங்கள் பணியை முடித்துக்கொண்டார்கல்.
அப்பிடியே வந்தாலும் மக்கள் தேங்கி நிற்கும் மழை நீரில் கொண்டாட்டம் அப்பிடின்னு கழக எதிரொலி கூட்டு தொலைக்காட்சி மூலமா ஒருட்டுவோமில்ல.
வருண பகவான் ரொம்பக் கோவமா இருக்காரு. சுனாமியே வந்தாலும் ஆச்சர்யம் இல்லை. பாலைவனக் கடவுளரை நம்பி கர்மபூமியில் எதையும் சரி செய்ய முடியாது. குற்றத்தை ஒப்புக்கிட்டு அந்த ஆபாச ராசனை பலி குடுத்துட்டா பரிகாரம் முடிஞ்சுடும். துணைக்கு ஆலந்தூரானையும் கழுவில் ஏற்றலாம். ஆமென்.
இயற்கை ஒன்றே நமக்கு தீர்வு மலை எந்த ஜாதி என்பதை ஜாதி புடியான்ங்க சொல்லுங்க பாப்போம்
இந்த முறையும் நாறப்போவது உறுதி. செய்த அத்தனை மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளிலும் ஊழலோ ஊழல்.