Load Image
dinamalar telegram
Advertisement

சுத்தமான நகரங்கள் பட்டியலில் நகராட்சி, பேரூராட்சிகள் பின்தங்கியது!:  தென்மாநிலங்களில் 72வது இடத்தை பிடித்தது திருவள்ளூர்

Tamil News
ADVERTISEMENT
திருவள்ளூர் நகராட்சி, தென் மாநிலங்களில் சுத்தமான நகரங்களின் பட்டியலில், 201ல் 72வது இடத்தை பிடித்துள்ளது.


திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் அகற்றுதல் பணிகள் மேம்படாததால், திருவள்ளூர் மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், பட்டியலில் மோசமான இடத்தைப் பிடித்து பின் தங்கியுள்ளன.தேசிய அளவில் துாய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை, மக்கள் தொகை அடிப்படையில் வகைப்படுத்தி, அவற்றை ஊக்குவிக்கும் வகையில், விருது வழங்கும் திட்டம், 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.


இதன்படி, பல்வேறு பிரிவுகளின் சுத்தமாக இருக்கும் நகரங்களின் தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும், மத்திய நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான இந்த தர வரிசை பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.கடந்த 2016ல், வெறும் 73 நகரங்களில் எடுக்கப்பட்ட இந்த சர்வே, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தது. 2017ல், 434 நகரங்களிலும், 2018ல் 4,203 நகரங்களிலும், 2019ல், 4,237 நகரங்களிலும், 2020ல், 4,242 நகரங்களிலும், 2021ல், 4,320 நகரங்களிலும் கணக்கெடுக்கப்பட்டது.

முக்கிய சாலைகள்



மக்கள் தொகை அடிப்படையில், ஐந்து வகையில் நகரங்களை வகைப்படுத்தி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிக மக்கள் கொண்ட நகரங்கள், 50 ஆயிரம் முதல், 1 லட்சம் வரையுள்ள நகரங்கள், 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரையுள்ள நகரங்கள், 15 ஆயிரம் முதல், 25 ஆயிரம் வரையுள்ள நகரங்கள், 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் கொண்ட நகரங்கள் என பிரித்து கணக்கெடுக்கப் பட்டுள்ளது.இந்த தரவரிசை பட்டியலில், ஒரு லட்சத்துக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட பட்டியலில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி இடம் பிடித்துள்ளது.இந்த வகைப்பாட்டில், 382 நகரங்களில், ஆவடி மாநகராட்சி 302வது இடத்தை பிடித்துள்ளது. நகர்ப்புற அமைச்சகம் வழங்கிய 7,500 மதிப்பெண்ணுக்கு, 2,045 மதிப்பெண்களே பெற்றுள்ளது.


அதேபோல், திருவள்ளூர் நகராட்சியை பொறுத்தவரையில், 1 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரம் என்பதால், தென் மாநிலங்கள் அளவில் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.தென் மாநிலங்களின் 201 நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 72வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தின் தலைமையிடமாக விளக்கும் திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமையாக செயல்படாததால், நகரின் எந்த பகுதியிலும், சாக்கடை துர்நாற்றமும், குப்பை குவியலை பார்க்க முடிகிறது.திருவள்ளூர் வீரராகவ பெருமாள், மருத்துவ கல்லுாரி போன்ற இடங்களுக்கு வரும் வெளியூர்வாசிகள், முக்கிய சாலைகளில் குவிந்திருக்கும் குப்பை குவியலை பார்த்து, முகம் சுளிக்கின்றனர்.

முருகனின் அறுபடை வீடு



அதே போல், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, திருத்தணி நகராட்சியிலும், பாதாள சாக்கடை கொண்டு வருவதற்கு தீர்மானித்து, அதற்கான அளவீடு பணிகள் முடிந்துள்ளன.ஆனாலும், கோவில் நகரான திருத்தணியை சுத்தமாக வைத்திருக்கும் பணிகள் திருப்தியாக இல்லை என்றே, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.கோவில் அமைந்திருக்கும் பகுதியில் அன்றாடம் கொட்டப்பட்டிருக்கும் குப்பையை பார்த்து, பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். திருத்தணி நகராட்சி பொறுத்தவரையில், 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் பேர் வசிக்கும் நகரங்கள் வகைப்பாட்டில் உள்ளது. தென்மண்டல அளவில், 326 நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில், 76வது இடம் பெற்றுள்ளது.மத்திய நகர்ப்புற அமைச்சகம் பல்வேறு பிரிவுகளின் கீழ், நகரங்கள் எந்த அளவுக்கு சுத்தமாக உள்ளது என்பதை தரம் பிரிக்கிறது.


அந்த வகையில், திடக்கழிவு மேலாண்மை, பொதுமக்களின் கருத்து, சுத்தமான காற்று, பிளாஸ்டிக் தடை, சாலைகளின் துாய்மை, பொது கழிப்பறை போன்றவை சுத்தமாக உள்ளதா என, ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய முக்கிய நகரங்களில் குறைவான மக்களே வசிக்கும் நிலையில், சாலைகளையும், நீர்நிலைகள், கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்திருக்க, அதிகாரிகள் சிரமப்படுவது ஏன் என்ற கேள்வியை, நகரவாசிகள் எழுப்புகின்றனர்.


கவுன்சிலர்களின் பங்கு முக்கியம்: முந்தைய ஆண்டுகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், துாய்மை பணிகள் பலவும் படுமோசமாகவே இருந்தது.இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்கும், தற்போது கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அந்தந்த வார்டுகளில் உள்ள துாய்மை பணியை கவுன்சிலர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் கண்காணிக்க வேண்டும்.அடுத்த ஆண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, திருவள்ளூர், திருத்தணி போன்ற முக்கிய நகரங்கள், தரவரிசை பட்டியலில் முக்கிய இடங்களில் இருப்பது கவுன்சிலர்களின் பங்கு மிக முக்கியம்.

- நமது நிருபர் -



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement