சென்னை துறைமுகத்திற்கு, வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் வாயிலாக கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது.பின் அங்கிருந்து, கச்சா எண்ணெய் குழாய்கள் வாயிலாக ராயபுரம், காசிமேடு, பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை வழியாக திருவொற்றியூர், மணலியில் உள்ள ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடும் சிரமம்
காசிமேடு மீன்பிடி பகுதியில், படகு பழுது பார்க்கும் இடம் அருகே, ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறியது. ஒரு டன் அளவிற்கு வெளியேறியதால், அப் பகுதியில் 70 மீட்டர் வரை தேங்கி, குளம் போல் காட்சியளித்தது.இதுகுறித்து மீனவர்கள் காவல் நிலையம், எண்ணெய் நிறுவனத்திற்கு தகவல் அளித்தனர். இதன்படி, எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வந்து, எண்ணெய் கசிவை சரி செய்தனர். பின், மோட்டார் வாயிலாக கச்சா எண்ணெயை அப்புறப்படுத்தும் போது, சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் மீனவர்கள், கச்சா எண்ணெய் கடலில் கலந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதன் பின், மீனவர்களிடம் சமரசம் பேசி, பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், கச்சா எண்ணெயை வாளிகளில் அள்ளி 'பேரல்'களில் நிரப்பி அப்புறப்படுத்தினர். சம்பவ இடத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, 'கச்சா எண்ணெய் மண்ணில் கலந்துள்ள ஆழம் குறித்து ஆய்வு செய்து, அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். இதுகுறித்து, அனைத்து மீனவர் சங்க தலைவர் நாஞ்சில் ரவி, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:காசிமேடில் குழாய் உடைந்து தேங்கிய கச்சா எண்ணெய், மழை நீர் மற்றும் கழிவு நீர் குழாய் வழியாக காசிமேடு கடலில் கலந்துள்ளது. இதற்கு, எண்ணெய் நிறுவனத்தின் கவனக் குறைவே காரணம்.இதனால் குடிநீர், மண்வளம் மற்றும் கடல் வளம் பாதிக்கப்படும். இந்த கச்சா எண்ணெய், மழையின் போது கடலில் பெரிய அளவில் கலக்கும். கடல் மாசுபடும்; மீன்வளம் பாதிக்கும். எண்ணெய் நிறுவனம் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
உரிய நிவாரணம்
இந்திய மீனவர் சங்க தலைவர் எம்.டி.தயாளன் அளித்த புகார்:எண்ணுார் துறைமுகத்தில், கடந்த 2017ல் இரு கப்பல்கள் மோதிக் கொண்டதில், அதிக அளவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. கடலில் பரவிய எண்ணெய் படலத்தை, வாளியால் அப்புறப்படுத்தினர். தற்போதும் வாளிகளில் தான் அள்ளுகின்றனர். எந்தவித புது தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வில்லை. 'ஜீரோ கேட்' துவங்கி, எண்ணெய் நிறுவனம் வரை செல்லும் குழாய்களை, அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், கச்சா எண்ணெயை வாளிகளில் அள்ளி 'பேரல்'களில் நிரப்பி அப்புறப்படுத்தினர். சம்பவ இடத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். - வாளியில் அள்ளி ஊத்துறது தான் இந்தியாவின் பேரிடர் மேலாண்மை குழுவின் திறமை. பாதுகாப்பு பட்ஜெட்டு 10 லட்சம் கோடி.