Load Image
dinamalar telegram
Advertisement

கடலூர் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் முற்றுகை: இழப்பீடு பெற்றுத் தர கலெக்டரிடம் வலியுறுத்தல்

Tamil News
ADVERTISEMENT
கடலுார்,-விழுப்புரம்- நாகப்பட்டினம் சாலைப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரக் கோரி, கடலுாரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுாரில், மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நேற்று நடந்தது. பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டம் துவங்கியபோது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கொளஞ்சியப்பன் தலைமையில் விவசாயிகள், கலெக்டரை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது, 'விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலை விரிவாக்கப் பணிக்காக கடலுார் மாவட்டம் பெரியப்பட்டு முதல், முட்லுார் தீத்தாம்பாளையம் வரை, நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்காக போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை.பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் பலன் இல்லை. ஆனால், அருகில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலம் கொடுத்தவர்களுக்கு வட்டியுடன் இழப்பீடு வழங்க அந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று, கடலுார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்' என்றனர்.இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து, முற்றுகையை விவசாயிகள் கைவிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர்.குமரகுரு: குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் தான் உரம் தரப்படும் என, கட்டாயப்படுத்தப்படுகிறது.ரவீந்திரன், விவசாயிகள் கூட்டமைப்பு: விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்குவதை எளிதாக்க வேண்டும். மாவட்டத்திற்குத் தேவையான உரங்களில் 30 சதவீதம் மட்டுமே இருப்பில் உள்ளது. வண்டல் மண் எடுப்பதிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. இரண்டு குறுவை சாகுபடி, ஒரு சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

குஞ்சிதபாதம், பேரூர்: பெலாந்துறை அணைக்கட்டில் வண்ணான்குடிகாடு பகுதியில் இரண்டு மதகுகளில் சேறும் சகதியுமாக உள்ளதால் மதகை திறக்க முடியவில்லை. திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள சித்தேரி-புத்தேரி வாய்க்காலை துார் வார வேண்டும். முருகானந்தம், காவாலக்குடி: ஸ்ரீமுஷ்ணம் வேளாண்மை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை மாற்றுவதற்குகூட போதுமான சாக்குகள் இல்லை. கரும்பு அரவை துவங்கியுள்ளதால், எந்த தேதியில் எந்த கிராமத்தில் கரும்பு வெட்டப்படும் என்ற விபரத்தை சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை வெளியிட வேண்டும். மாவட்டத்தில் யூரியா உரத்திற்கான தட்டுப்பாடு உள்ளது.

விவசாயிகளுக்கு பதிலளித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் பேசுகையில், 'மாவட்டத்தில் ஆயிரம் டன் யூரியா இருப்பில் உள்ளது. 200 டன் யூரியா வியாழக்கிழமையன்று வந்து சேர்ந்துள்ளது. 1,585 டன் தேவையென்று அரசுக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் யூரியா வந்தடையும்' என, தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement