ADVERTISEMENT
கோவை:சரவணம்பட்டியில் பூட்டியிருந்த வீட்டில், 30 பவுன் நகை திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.சரவணம்பட்டி, விநாயகபுரம், விளாங்குறிச்சி ரோடு சங்கரா நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 47. இவர், குடும்பத்தினருடன் உறவினர் திருமணத்துக்காக, 7ம் தேதி வெளியூர் சென்றார். பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லம்மாள், தனது நகை பையை பாதுகாப்பாக வைத்திருக்க, சிவக்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அந்த பையை திரும்பக் கொடுத்தபோது, அதில் நகை இல்லை என செல்லம்மாள் புகார் கூறியிருக்கிறார். உடனே, பீரோவில் வைத்திருந்த தங்களது நகைகள் இருக்கிறதா என சிவக்குமார் குடும்பத்தினர் பார்த்தனர். அப்போது, பீரோவில் இருந்த, 30 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன.'சிசி டிவி' காட்சிப்பதிவுகள் உதவியுடன், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். கை விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டன. இதில், சிவகங்கை மாவட்டம் உத்திரகோச மங்கையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 43, என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. டிரைவரான இவர், மணியகாரம்பாளையம் இளங்கோ நகரில் வசிக்கிறார். ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டவர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிவக்குமார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். பூட்டியிருக்கும் வீட்டை கண்காணித்து திருடியதாக, போலீசில் வாக்குமூலம் அளித்தார். அவரிடம் இருந்து, 30 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 12 லட்சம் ரூபாய். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!