Load Image
dinamalar telegram
Advertisement

பரந்து விரிந்த ஆக்கிரமிப்பு; சுருங்கிய ஓடைகள் நீர் வழிப்பாதையை மீட்க எதிர்பார்ப்பு

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூரில் பிரதானமான ஓடைகள் பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப் போய் கிடக்கின்றன. அரசு துறைகள் இணைந்து அளவீடு செய்து நீர் வழிப்பாதைகளை மீட்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர் நகரின் மைய பகுதியில் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. இதில் மாநகராட்சி எல்லைக்குள் ஜம்மனை ஓடை, சங்கிலிப் பள்ளம், மந்திரி வாய்க்கால் மற்றும் சபரி ஓடை ஆகிய ஓடைகள் வந்து சேருகின்றன. நொய்யல் ஆற்றின் கரைகள், ஓடைகளின் கரையோரங்கள், நீர் வழிப்பாதைகள் பெருமளவு ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து வருகின்றன.நுாற்றுக்கணக்கான வீடுகள், குடிசைகள், நிறுவனங்களில் மதிற்சுவர்கள், ஆற்றை ஆக்கிரமித்து அமைத்துள்ளனர். இதனால், மழை காலத்தில், பெருக்கெடுத்து வரும் மழைநீர் முறையாக பாய்ந்து செல்ல வழியின்றி, அதன் போக்கிலிருந்து பாதை மாறி, தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்புகளிலும் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது.அவ்வகையில், திருப்பூர் இரு முறை வெள்ள பெருக்கால் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், அண்மையில் ஐகோர்ட் உத்தரவுப்படி நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார பிரிவு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு, வருவாய்த்துறை மற்றும் போலீசார் இணைந்து இதில் ஈடுபட்டனர்.அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் 500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து அகற்றப்பட்டன. மேலும் சில பகுதிகளில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரம், பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், கண்டு கொள்ளப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாரபட்சம் எதற்கு?



இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருந்து தற்போது அகற்றப்படுவது வரவேற்கக்தக்கது. அதேநேரம், ஜம்மனை மற்றும் சங்கிலிப் பள்ளம் ஓடைகளின் கரைகளை ஒட்டி ஏராளமான தனி நபர்கள் பெரிய அளவில் சுற்றுச்சுவர் எழுப்பி ஓடையை ஆக்கிரமித்துள்ளனர்.இதுபோன்ற ஆக்கிரமிப்பின் மீது நடவடிக்கை இல்லை. ஜம்மனை ஓடை மற்றும் சங்கிலிப் பள்ளம் நகரில் ஏறத்தாழ 3 கி.மீ.,தொலைவு கடந்து வருகிறது. இதனை பெரிய நிறுவனங்கள், தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி வாடகைக்கும், வர்த்தக ரீதியாகவும் பயன்படுத்துகின்றனர்.இது குறித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை. அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். உரிய அளவீடு விவரங்கள் என்று கை விரிக்கின்றனர். இதனை மாநகராட்சி சார்பில் மட்டும் மேற்கொள்ளாமல், பொதுப்பணி, வருவாய்த்துறையினரும் இணைந்து, இந்த நீர் வழித்தடங்களை துவக்கம் முதல் இறுதி வரை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய வேண்டும்.இதற்கு மாவட்ட அளவில் துறைகள் ஒருங்கிணைந்து களம் இறங்கி பணியாற்ற வேண்டும். சில இடங்களில் 60 அடியாக உள்ள ஓடைகள் 20 அடி வரை சுருங்கி விட்டது. நகர எல்லைக்குள் இது சாக்கடை கால்வாய் என்ற அளவில் தான் காணப்படுகிறது.ஓடைகளின் இரு கரைகளிலும் அளவீடு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வார வேண்டும். அரசியல்வாதிகள் தலையீடு இன்றியும் இப்பணி நடக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் 500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து அகற்றப்பட்டன. ஆனால், அதே நேரம், பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், கண்டு கொள்ளப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement