சென்னை;'பிரிந்தால் வீழ்வீர்கள்' என அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழனிசாமியை எதிர்த்து, பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகளில் இறுதி தீர்ப்பு வராவிட்டாலும், இடைக்கால தீர்ப்புகள் பழனிசாமிக்கு சாதகமாகவே வந்துள்ளன.

ஆனாலும் பழனிசாமி மகிழ்ச்சி அடைய முடியாத அளவுக்கு அவர் மீதும் வேலுமணி, விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை மட்டுமல்லாது மத்திய அரசின் வருமான வரித் துறை, அமலாக்கத் துறையும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளது.
இந்நிலையில் டில்லி சென்ற பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ., முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்புக்கு பின் பேட்டியளித்த பழனிசாமி, 'அமித்ஷாவுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. கோதாவரி -- காவரி இணைப்பு திட்டம் போன்ற தமிழகத்தின் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை முன்வைத்தோம். தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது பற்றி, அவரது கவனத்திற்கு கொண்டுச் சென்றோம்' என்றார். ஆனாலும், இந்த சந்திப்பில் 90 சதவீதம் அரசியல் பேசபட்டது என்கின்றனர் பா.ஜ.,வினர்.
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது: கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பழனிசாமியிடம் தான் அமித்ஷா பேசினார். கடைசியாக 2004-ல் கூட்டணியில் இருந்தபோது, பா.ஜ.,வுக்கு ஜெயலலிதா ஏழு தொகுதிகளை ஒதுக்கினார். அதுபோல ஏழு தொகுதிகள் வேண்டும் என, அமித்ஷா கேட்டார். ஆனால் ஏதேதோ காரணம் கூறி கடைசியில் ஐந்து தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினார். அதுபோல, அமித்ஷா தலைமையில் கூட்டணியை அறிவிக்கவும் மறுத்து பழனிசாமியே அனைத்தையும் செய்தார். இதனால் அவரை பற்றி அமித்ஷாவுக்கு நன்கு தெரியும்.
'வரும் 2024 லோக்சபா தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி வென்றால் தமிழகத்தில் நீங்கள் அரசியலே செய்ய முடியாது. எனவே, 2024-ல் குறைந்தது 25 இடங்களிலாவது வெற்றி பெற திட்டமிடுங்கள். அதற்கு மாறாக, கட்சி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் மட்டும் செயல்பட்டால், மேலும் பிளவு ஏற்படும். ஏற்கனவே, தினகரன் ஓட்டுகளை பிரித்துள்ளார். இனியும் பிரிந்தால் வீழ்வீர்கள்' என, அமித்ஷா எச்சரித்துள்ளார். 'அனைவரையும் அரவணைத்து, அ.தி.மு.க., பிளவுபடுவதை தடுத்து, 2024-ல் பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் மற்றும் சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணி அமைக்க, இப்போது திட்டமிடுங்கள். 2024-ல் தி.மு.க., அதிக இடங்களை வென்றால் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ஊழல் வழக்கில் சிறை செல்ல வேண்டி வரும். எனவே, உங்களுக்குள் அடித்து கொள்ளாமல், தி.மு.க.,வை தோற்கடிக்க வேலை செய்யுங்கள்' என்றும், பழனிசாமியிடம் அமித்ஷா கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (49)
அவர்களுக்கு இல்லாத வருத்தம் உங்களுக்கு ஏன்
பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்ய வேண்டுமா. வீழ்ந்தால் எழுந்துவிடலாம், ஆனால் ஓபிஎஸ்ஸை கூடவே வைத்துக்கொண்டால் வீழமாட்டார்கள், அழிந்துவிடுவார்கள். சசிகலா குடும்பம், பன்னீர்செல்வம் குடும்பம் இல்லாத அதிமுக மீண்டும் ஃபுல் ஃபார்மில் வந்துவிடும். பன்னீர் செல்வம் அரசியல் வாழ்க்கை சசிகலா அரசியல் வாழ்க்கை போல முடிந்துவிட்டது. அவர்களை கழட்டிவிடுவதே அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லது.
பழனிசாமி மகிழ்ச்சி அடைய முடியாத அளவுக்கு அவர் மீதும் வேலுமணி, விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை மட்டுமல்லாது மத்திய அரசின் வருமான வரித் துறை, அமலாக்கத் துறையும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளது. —
இந்த திமுகவில் இருந்தும்,அதிமுகவில் இருந்தும் நம்மை காப்பாற்ற யாருமே இல்லையா?
அம்மா கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்களே.