ஆத்தூர் அருகே ஆம்னி பஸ் மீது லாரி மோதி விபத்து; தந்தை, தாய், மகன் உள்பட 6 பேர் பலி
ஆத்தூர்:ஆத்தூர் அருகே, ஆம்னி பஸ்சில் செல்ல முயன்றபோது, லாரி மோதிய விபத்தில் தந்தை, தாய், மகன் உள்பட ஆறு பேர் பலியாகினர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த, திருநாவுக்கரசு மகள் தீபா, சென்னையில் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு, ஆறு பேர், சென்னைக்கு செல்வதற்காக சீர்வரிசை பொருட்களுடன், நள்ளிரவு, 12:10 மணியளவில், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில், ஆம்னி பஸ்சில் செல்வதற்கு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, சேலத்தில் இருந்து, சென்னை நோக்கி சென்ற அரவிந்த் என்ற தனியார் ஆம்னி பஸ் வந்தவுடன் அந்த பஸ்ஸை நிறுத்தி, பஸ்சின் பின்பகுதியில், கிளீனர் உதவியுடன் லக்கேஜ் பெட்டி திறந்து சீர்வரிசை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, சேலத்தில் இருந்து, ஆத்தூர் நோக்கி எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரி, பஸ்சின் பின்னால் இருந்த ஏழு பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பெத்தநாயக்கன்பாளையம், சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த தாண்டவராயன் மகன் டைலர் திருநாவுக்கரசு, 63, அவரது மகன் ரவிக்குமார், 41, உறவினரான, தலைவாசல் அருகே ஆறகளூரை சேர்ந்த திருவேங்கடம் மகன் செந்தில்வேலன், 46, சுப்ரமணி, 40, மற்றும் ஆம்னி பஸ்சின் கிளீனர் சேலம் தீபன், 25, உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த திருநாவுக்கரசு மனைவி விஜயா, 60, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து, சேலம் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால், விபத்தில் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கால் முறிவு ஏற்பட்ட உறவினரான முருகேசன் மகன் ஜெயபிரகாஷ், 41, என்பவர் ஆபத்தான நிலையில் உள்ள இவர்கள், மேல் சிகிச்சைக்கு சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தகவலறிந்த ஆத்தூர் ஆர்.டி.ஓ., சரண்யா, வாழப்பாடி டி.எஸ்.பி., சுவேதா ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார், வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை, தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (4)
காசுக்கு லைசென்ஸ் கொடுத்தால் இப்படித்தான்.கிளீனர் ஓட்டினாலும் இப்படி ஆகும்
லாரியின் ஓனர் தலைமறைவான ஓட்டுனருக்கு உதவி செய்துவிட்டு வேறொரு ட்ரைவரை போட்டு லாரியை மீட்டு விடுவான் , போலீசின் பாக்கெட்டும் நிரம்பி வேறொரு கேஸுக்கு ஓடி விடுவார்கள் , அந்த லாரியினால் உயிரிழந்த குடும்பம் போல வேறொரு குடும்பம் எங்கோ சாவுக்காக காத்திருப்பார்கல்
கண்ட இடத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்தி ஏற்றிக்கொள்ளுதல், கேட்ட இடத்தில் நிறுத்துதல் எல்லாம் ஒரு காலத்தில் சரிப்பட்டு வந்தது. இப்பல்லாம் வாடகை வீடு கூட இல்லாதவன் கார், டூ வீலர்னு பார்க்கிங் இடமில்லாம கண்ட எடத்துல நிறுத்திடுறான். ஆம்னி பஸ்காரனுக்கு மட்டும்.பார்க்கிங் வசதி இருக்குமா? தெருவோராத்திலேயே நிறுத்திட்டுப் போறான். அதுவும் சின்ன சின்ன சந்து பொந்துகளில்தான் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படும். முதலில் இந்த சாலைகளை ஒழுங்கு பண்ணாம எட்டுவழிச்சாலை, 16 வழிச்சாலைன்னு போட ஆரம்பிச்சுட்டாங்க. பேரு கதி சக்தி திட்டமாம்.
ஆம்னி பஸ் டிரைவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஹைவேஸில் நள்ளிரவில் நடு ரோட்டில் இண்டிகேட்டர் கூடப் போடாமல் பஸ்ஸை நிறுத்தி விபத்துக்கு வழி வகுத்துள்ளார்.அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.