புதுடில்லி:அதோ, இதோ என இழுத்தடிக்கப்பட்டு வந்த காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி, ஒருவழியாக அறிவிக்கப்பட்டது. அக்., 17ல் ஓட்டுப்பதிவும், அக்., 19ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், காங்., செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதிருப்தி குழு
காங்.,கில், 'ஜி 23' என அழைக்கப்படும் 23 மூத்த தலைவர்கள் அடங்கிய அதிருப்தி குழுவினர், இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு கட்சி தலைமை செவி சாய்க்காததை அடுத்து, மூத்த தலைவர்கள் கபில் சிபல், அஸ்வனி குமார் ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர்.
இந்நிலையில், 50 ஆண்டுகளாக காங்.,கில் பல்வேறு பதவிகளை வகித்து வந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார். அவர் அளித்த ராஜினாமா கடிதத்தில், கட்சியின் சீரழிவுக்கு ராகுல் தான் பொறுப்பு என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதற்கிடையே காங்., தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வந்தது.
ஒவ்வொரு முறையும், இதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் காங்., செயற்குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. இடைக்கால தலைவர் சோனியா மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்று இருப்பதால், 'ஆன்லைன்' வாயிலாக கூட்டம் நடத்தப்பட்டது.
அதிருப்தி குழுவைச் சேர்ந்த ஆனந்த் சர்மா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். சோனியாவுடன் வெளிநாடு சென்றுள்ள ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின், கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, பொதுச் செயலர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் உட்பட, கட்சியின் அனைத்து மட்டத்திற்குமான தேர்தல் அக்., 17ல் நடத்தப் படும். அக்., 19ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை செப்., 22ல் வெளியிடப்படும். செப்., 24ல் துவங்கி, செப்., 30 வரை வேட்பு மனு தாக்கல் நடக்கும். அக்., 1 முதல் வேட்பு மனு பரிசீலிக்கப்படும்; வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்., 8 கடைசி நாள்.
சம்மதம்
செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் தேர்தல் தேதி முடிவு செய்யப் பட்டது. கேள்விகளோ, கோரிக்கைகளோ இன்றி அனைவரும் இதற்கு சம்மதித்தனர். கட்சியின் பல்வேறு மட்டத்திலும், குறிப்பாக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும் தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆனந்த் சர்மா கூறுகையில், ''தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்குமா என தெரியவில்லை,'' என்றார்.
பொம்மை தலைவர் கூடாது!
காங்கிரஸ் தலைவராக யார் வரவேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டு தேர்தல் நடத்தினால், அது சரிப்பட்டு வராது. சோனியா குடும்பத்தின் சொல் பேச்சு கேட்டு நடக்கும் பொம்மையைப் போன்ற ஒருவர், கட்சியின் தலைவர் ஆக்கப்பட்டால், காங்கிரஸ்கட்சியால் நீடித்து நிலைக்க முடியாது.
பிரித்விராஜ் சவான்
மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர், காங்.,
வாசகர் கருத்து (11)
பாவம் யார் தலையில் இறங்கப்போகிறது என்று தெரியவில்லை . பப்பு வந்தால் 2029 வரை BJP ஆட்சிதான்
அன்றைய தினம் தாயும் மகனும் நல்லாவே கூத்து கட்டுவார்கள்.... கடேசியில் தற்போதய நிலையே தொடரும் என அறிவிப்பார்கள்.....தேர்தலாவது மண்ணாங்கட்டியாவது...
மூன்று பேராயும் எப்படி விடமுடியும் , அவர்கள் போட்டியிடா விட்டால் குடுமிப்பிடி சண்டைதான் வேஷ்டிகள் கிழியும்
நீங்க என்னத்தான் கூத்து கட்டினாலும் இந்திய மக்களை காங்கிரசுக்கு மூடுவிழா எடுக்க தயாராகிவிட்டார்கள் .....
நீங்கள் இனி பாஜக-வை வெல்ல முடியாது.உங்களால்தான் பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது.வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அது நடக்கும்.உங்கள் பின்னாடி சிலர் நிற்பதற்கு காங்கிரசின் ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட் தான்.மக்களின் சீரழிவைப்பற்றி உங்களுக்கு துளியும் கவலையில்லை.