புத்தக திருவிழாவிலும் அதிகாரிகளின் கைவண்ணம் மழைநீர் புகுந்ததால் விற்பனையாளர்களுக்கு நஷ்டம்
கரூர் : மாவட்ட அதிகாரிகளின் 'கைவண்ணத்தால்' முறையாக அரங்கம் அமைக்காததால் புத்தக திருவிழா அரங்கிற்குள் மழைநீர் புகுந்து ஏராளமான புத்தகங்கள் மழை நீரில் நனைந்து விற்பனையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கரூர் திருமாநிலையூரில் பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடத்தில் ஆக.19ல் புத்தக திருவிழா தொடங்கப்பட்டது. இதில் அமைக்கப்பட்டுள்ள 135 அரங்குகளில் 115 அரங்குகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் மாவட்ட நுாலகத்துறை வனத்துறை இல்லம்தேடி கல்வி உள்ளிட்ட அரசின் துறைகளும் இடம் பெற்றிருந்தன. நாளையுடன் புத்தக திருவிழா நிறைவடைய உள்ள நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் புத்தக அரங்கிற்குள் மழைநீர் புகுந்து புத்தகங்கள் நனைந்ததால் விற்பனையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகம் சார்பில் 1.50 கோடி ரூபாய் செலவில் புத்தக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பொதுப்பணித்துறை மேற்பார்வையில் அரங்கம் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகளை ஆளும் கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். புத்தக கண்காட்சி அரங்கம் மட்டுமல்லாது கலை நிகழ்ச்சி அரங்கம் தொல்லியல் அருங்காட்சியகம் உணவகம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறிய வழிமுறைகளை பின்பற்றாமல் ஏனோ தானோவென அரங்கம் அமைத்துள்ளனர்.
இதன் காரணமாக நேற்று முன்தினம் பெய்த மழையில் அரங்கின் மேற்கூரை தகரத்திலிருந்து ஓட்டை வழியாக புத்தக அரங்குகளில் மழைநீர் கொட்டியது. மேலும் கடைகளுக்குள் ஒரு அடி உயரம் வரை வெள்ளநீர் புகுந்ததால் ஏராளமான புத்தகங்கள் நீரில் மூழ்கி வீணாகின. அரங்கின் முன்பாதி பகுதியில் அமைத்திருந்த 70 கடைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து விட்டன.
புத்தக அரங்கே சேறும் சகதியுமாக மாறி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் நுழைவாயில் பகுதியில் எம்-சாண்ட் மணலை கொட்டி மழைநீரை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மழை பெய்தால் இந்த இடத்தில் தண்ணீர் தேங்கும் என தெரிந்திருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். அனைத்து பணிகளிலும் 'வருவாய்' பார்க்கும் அதிகாரிகள் புத்தக திருவிழாவையும் விட்டு வைக்கவில்லை. விற்பனையாளர்கள் தற்போது பெய்த மழையால் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!