விநாயகர் சிலை வைக்க நிபந்தனை ஜமாத் மனுவுடன் விண்ணப்பிக்க உத்தரவு
சென்னை : ஜமாத் கமிட்டியின் மனு உடன், விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கோரும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்கும்படி, கோவை பெரிய கடை வீதி போலீசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, உக்கடம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட, அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மகாலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுவில், உக்கடம் தெற்கு பகுதியில், புள்ளகாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் விநாயகர் சிலை அமைத்து, சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்கும்படி கோரப்பட்டது.மனு, நீதிபதி சதீஷ் குமார் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வீட்டுவசதி காலனியில் குடியிருப்பவர்கள், விநாயகர் சதுர்த்தி கொண்டாட விரும்புகின்றனர். 'மற்ற சமூகத்தினரும் இதில் கலந்து கொள்ள விரும்புகின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்' என்றார்.
போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, ''அந்தப் பகுதியில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கின்றனர். அனுமதி வழங்கினால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும்,'' என்றார். அதற்கு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'ஜமாத்தில் இருப்பவர்களும் கலந்து கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை' என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கும் பின், நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
விநாயகர் சிலை நிறுவவும், சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி கேட்டு, ஜமாத் கமிட்டியின் மனுவையும் சேர்த்து, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உத்தரவாத மனுவை மனுதாரர் அளிக்க வேண்டும். முறையான பாதுகாப்பை, போலீசார் உறுதி செய்ய வேண்டும். வீட்டுவசதி காலனிக்குள் மட்டுமே, சிலையை வைத்து கொண்டாட வேண்டும். சிலை ஊர்வலம் செல்லக் கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0..........