Load Image
Advertisement

தொல்லியல் துறைக்குச் சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பு!

Tamil News
ADVERTISEMENT

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பீர்க்கன்காரணையில், தொல்லியல் துறைக்குச் சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகவும், வணிக பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதை தடுக்க வேண்டிய தொல்லியல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள், அலட்சியமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


எனவே, இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பீர்க்கன்காரணை பகுதியில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இது பேரூராட்சியாக இருந்த போது முதல், இங்குள்ள புது பெருங்களத்துார் பகுதியில், தொல்லியல் துறைக்குச் சொந்தமான நிலங்கள், ரியல் எஸ்டேட் கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ள நிலையிலும், இதுபோன்ற கட்டுமான பணிகள் தொடரும் நிலையில், இவற்றை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Latest Tamil News
புது பெருங்களத்துார் சூரத்தம்மன் கோவில் துவங்கி, காமராஜர் நெடுஞ்சாலையில், ரயில்வே கடவுப் பாதை வரை உள்ள, நிலங்கள் அனைத்தும், தொல்லியல் துறைக்குச் சொந்தமானவை.இந்நிலங்களை பீர்க்கன்காரணை பேரூராட்சியாக இருந்த போது முதல், பிரதான கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ஆக்கிரமித்து, விவரம் அறியாத உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலங்களில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தொல்லியல் துறை விதிப்படி, அத்துறையின் நிலங்களில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய வீடுகள் கட்டும் பணிக்கு அனுமதி தேவையில்லை.ஆனால், புது பெருங்களத்துாரில் விதிகளை மீறி, மூன்று முதல் நான்கு தளங்களுடன் கூடிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.இந்த கட்டடங்கள் மட்டுமின்றி, இங்குள்ள, அனைத்து கட்டடங்களுக்கும் மின் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, வீட்டு வரியும் வசூலிக்கப்படுகிறது.இங்குள்ள, எந்த கட்டடங்களுக்கும், கட்டட அனுமதி வழங்கப்படவில்லை. கட்டட அனுமதி வழங்காமல், மாநகராட்சி பகுதியில் புதிதாக ஒரு கட்டுமான பணி நடந்தால், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் அல்லது ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு செய்து, பணிகளை நிறுத்த வேண்டும்.


ஆனால், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள நகரமைப்பு அலுவலக அதிகாரிகள், முறைகேடாக அனுமதி அளிப்பதாக கூறப்படுகிறது.இவ்வாறு அனுமதி கிடைப்பதால், இங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்வோர், போலியாக பணி நிறைவு சான்றிதழ் தயாரித்தும், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்களின் சிபாரிசு படியும், பெருங்களத்துார் துணை மின் நிலையத்தில் உள்ள, மின் வாரிய அதிகாரிகளுக்கு, 'கவனிப்பு' செய்தும், முறைகேடாக மின் இணைப்பு பெறுகின்றனர்.மேற்கண்ட முறையில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, தொல்லியல் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- வரலாற்று ஆய்வாளர்கள்

கள ஆய்வில் சிக்கல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் சேர்த்து, தொல்லியல் துறையில் நான்கு அதிகாரிகள் மட்டுமே பணியில் இருப்பதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் முழுதும் சுற்றி, கள ஆய்வு செய்வதில் அதிகாரிகளுக்கு சிக்கல் நீடிக்கிறது.இதை பயன்படுத்தி, துறையின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர் கதையாகிறது. இந்த நான்கு மாவட்டங்களும் சி.எம்.டி.ஏ.,வின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்த துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட விதிமீறல் கட்டடங்களுக்கு, நோட்டீஸ் வழங்க வேண்டும்.அதை, அடிப்படையாக வைத்தே, தொல்லியல் துறையினர் நோட்டீஸ் வழங்க வேண்டும். அவர்கள் நோட்டீஸ் வழங்கிய பின், அதை, மேற்கண்ட துறை அதிகாரிகள் கவனித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இப்பணிகள், ஒழுங்காக நடக்காததால், தொல்லியல் துறை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.




ஒரே இடத்தில் 40 இணைப்புகள்...!

2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி, திட்ட அனுமதி பெற்று நடக்கும் கட்டுமானங்களில் பணி நிறைவு சான்றிதழ் இருந்தால் மட்டுமே, மின் இணைப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அவ்வாறு, பணி நிறைவு சான்றிதழே இருந்தாலும், ஒரு நபரின் பெயரில், ஒரு மின் இணைப்பிற்கு மேல், வழங்கக் கூடாது என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அதை மீறி, புது பெருங்களத்துார் பகுதியில் திட்ட அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களில், ஒரே நபரின் பெயரில் 30க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன.தவிர அருணகிரிநாதர், திருவள்ளூவர் தெருக்கள், ஸ்ரீனிவாசா நகர் சாலை ஆகியவற்றில், சி.எம்.டி.ஏ., அனுமதியின்றி நடக்கும் நான்கு தளங்கள் அளவுள்ள புதிய கட்டடங்களுக்கும், தற்போதே மின் இணைப்பு பெற, அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.



தொல்லியல் துறை நிலங்கள் உள்ள தெருக்கள்

பீர்க்கன்காரணை -சீனிவாச நகர், பாலாஜி மற்றும் ராஜாஜி தெருக்கள்பெருங்களத்துார்- அன்னை தெரசா, வெங்கடேஸ்வரா, திருவள்ளுவர், மணிமேகலை, வள்ளலார், ஜானகிராமன், ராமானுஜர், மோதிலால், முத்துவேலர், புத்தர், ஜவஹர்லால் நேரு தெருக்கள், அன்னை தெரசா மற்றும் புத்தர் 2வது குறுக்கு தெருக்கள், ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி சாலை, காந்தி மற்றும் கிருஷ்ணா சாலைகள்...ஆர்.எம்.கே. நகருக்குட்பட்ட கல்கி, சோழன், அருணகிரிநாதர், வெங்கடேஷ்வரா, செல்வ விநாயகர் கோவில், மறைமலை அடிகளார், அஞ்சுகம், வ.உ.சி., காவேரி, சரோஜினி லால்பகதுார், பாரதிதாசன், சிட்டிபாபு, திலகர் தெருக்கள், முத்துவேலர் 3வது குறுக்கு தெரு.ராஜமாணிக்கம் சாலை, சர்தார் ஆதிகேசவலு, மகாலட்சுமி நகர்கள் மற்றும் என்.ஜி.ஓ., நகர் விரிவு ஆகியவற்றில் உள்ள, தொல்லியல் துறையின் நிலங்களில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.இந்நிலங்களின் சர்வே எண்கள்: 107&108, 145/B, 153/1A, 143/3, 146, 169, 149/1A, 158, 149, 153/3A, 159/3, 172/2B, 143/14, 154/1c மற்றும் 155/3c.



வாசகர் கருத்து (13)

  • Ganapathy Subramanian - Muscat,ஓமன்

    ஒரு காலத்தில் விவசாய நிலங்களாக இருந்தவைகளில் சுமார் ஒரு 50 - 60 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் கம்பெனி இருந்த காலத்தில் வீடு கட்டி குடியேறியவர் பலர். அந்த நிலங்களை தொல்லியல் துறை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னால் என்ன காரணத்தினாலோ அவர்களிடம் அனுமதி பெற்று கட்டடம் கட்ட ஆணை பிறப்பித்துள்ளது. இது எப்படி ஆக்கிரமிப்பு ஆகும்? அதோடு தொல்லியல் துறை நிலம் என்றால் 50 - 60 வருடங்களாக குடியிருப்போருக்கு தொல்லியல் துறை நஷ்ட ஈடு வழங்காமல் தன்னுடைய நிலம் என்று எப்படி கூற முடியும். செய்தியாளர் விவரங்களை சரியாக கூறவும். பாதிக்க பட்டவர்களில் எங்களுடைய 50 வருட பழமையான வீடும் உண்டு.

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    இந்த பகுதியில் தொல்லியல் துறை அனுமதியோடு கட்டப்பட்ட கட்டிடங்கள் பல இருக்கின்றன. தற்போதைய பெருங்களத்தூர் பாலம் பஸ்நிலையம், ரயில்நிலையம், தாம்பரம் மாநகராட்சியின் பீர்க்கன்காரனை அலுவலகம் என்று அனைத்துமே தொல்லியல் துறையால் அனுமதி வழங்கப்பட்ட கட்டிடங்களே.. இந்த சர்வே நம்பர் விவகாரம், கவுன்சிலர்கள் கட்டிட உரிமையாளர்களிடம் மிரட்டி வசூல் பார்க்க, மாநகராட்சியால் செய்யப்பட உதவி ..அவ்வளவுதான் .....குறிப்பாக ஆட்களை செலெக்ட் செய்து மிரட்டி காசு வசூல் செய்யும் வேலை / ஏமாற்றும் வேலை மட்டுமே நடக்கும் ...திராவிட மாடல் சம்பாத்தியத்தில் இன்னொரு வகை ...அவ்வளவுதான் ...

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஆக்கிரமிப்பு என்று வந்துவிட்டால் தனியார் நிலம், தொல்லியல் துறை இடம், கோவில் நிலம் என வேறுபடுத்தி பார்க்க தெரியாத ஒரே இனம் உலகில் திராவிட இனம் மட்டும்தான்.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    தாம்பரம் மாநகராட்சியில் மேயர் பதவி அதிகாரம் எல்லாம் துணை மேயர் வசம் இருப்பதால் அவன் வைத்ததுதான் சட்டம்.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    எல்லா துறைகளும் ஆக்கிரமிப்பில்தான் இருக்கிறது . அப்படி இருக்க தொல்லியல் என்றால் என்ன நடுத்தர மற்றும் பாவத்துக்கு பயந்த மக்கள் மட்டுமே பயப்படுவார்கள் . வந்தே மாதரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement