Load Image
Advertisement

காங்., கில் குலாம் நபியைத் தொடர்ந்து ஆனந்த் சர்மாவும் விலகல்!

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி:மூத்த தலைவர் குலாம் நபியை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மாவும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, காங்., மாநிலத் தலைவரை மாற்றக் கோரி, புதுச்சேரியிலும் நேற்று போராட்டம் நடந்தது.


லோக்சபாவுக்கு 2014ல் நடந்த தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. கட்சியில் அனைத்து நிலைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி, கட்சித் தலைவர் சோனியாவுக்கு, 23 மூத்த தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதினர்.


மறுப்பு




இதையடுத்து, 'ஜி - 23' என்றழைக்கப்படும் இந்த அதிருப்தி தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். கட்சிக்கு நிரந்தர தலைமையை இவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க, சோனியாவின் மகன் ராகுல் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது.


இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் காங்., தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக, அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்று குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.இந்த அதிர்ச்சியில் இருந்து கட்சித் தலைமை மீள்வதற்குள், ஹிமாச்சல பிரதேசத்தில் கட்சியின் வழிநடத்துதல் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்து, மற்றொரு மூத்த தலைவரான ஆனந்த் சர்மா வெளியேறியுள்ளார். இவரும், ஜி - 23 குழுவைச் சேர்ந்தவர்.


சித்தாந்தம்




இது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆனந்த் சர்மா கூறியுள்ளதாவது:காங்கிரஸ் சித்தாந்தம் என்பது என் ரத்தத்தில் கலந்துள்ளது. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. கட்சிக்காக தொடர்ந்து உழைக்க தயாராக உள்ளேன்.அதே நேரத்தில், ஹிமாச்சல பிரதேசத்தில் கட்சியின் வழிகாட்டுதல் குழுவின் தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை.


கட்சி தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. கட்சித் விவகாரங்கள் குறித்தும் என்னிடம் ஆலோசனை கேட்கப்படுவதில்லை.தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாலும், அவமதிப்பு செய்யப்படுவதாலும், அந்தப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்; சுயமரியாதை என்பது சமரசம் செய்யக் கூடியதல்ல.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான அரசு ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த, மிக மூத்த தலைவரான ஆனந்த் சர்மா, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


அதிர்ச்சி




கடந்த 1982ல் இந்த மாநிலத்தில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆனந்த் சர்மா. அப்போது பிரதமராக இருந்த இந்திராவால், 1984ல் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருகிறார்.மத்திய அமைச்சர் உட்பட பல பொறுப்புகளை வகித்துள்ள ஆனந்த் சர்மாவின் இந்த முடிவு, கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.


தலைவர் தேர்தல் துவங்கியது



காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதனன் மிஸ்திரி கூறியதாவது:கட்சியின் பல்வேறு நிலைகளுக்கான தேர்தல் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டன. அதன்படி, தலைவர் பதவிக்கான தேர்தலை, ஆக., 21 முதல், செப்., 20க்குள் முடிக்க தேதி நிர்ணயிக்கப்பட்டது.எந்த தேதியில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவது என்பது குறித்து விரைவில் நடக்க உள்ள செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.




காங்., மேலிட பொறுப்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு



புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் முடிந்த பின், மாநில காங்., தலைமையை மாற்ற வேண்டும் என, கட்சியில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால், காங்., கட்சியில் இரண்டு கோஷ்டிகள் உருவாகி மோதல் வெடித்துள்ளது. அதிருப்தி காங்., நிர்வாகிகள், கடந்த மாதம் பெங்களூரு சென்று காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை சந்தித்து, புதுச்சேரி மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியனை மாற்ற வலியுறுத்தினர்.இந்நிலையில், புதுச்சேரி காங்., அலுவலகத்தில், அரசியல் விவகார குழுவின் கூட்டம்நடந்தது.

கூட்டத்தில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பங்கேற்றதை அறிந்த அதிருப்தி காங்., நிர்வாகிகள், புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகம் எதிரே திரண்டனர்.கட்சி அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, கோஷம் எழுப்பினர். பகல் 12:30 மணிக்கு கூட்டம் முடிந்து வெளியே வந்த தினேஷ் குண்டுராவை, அதிருப்தி நிர்வாகிகள் சூழ்ந்தனர்.

'மாநில காங்., தலைவரை ஏன் மாற்றவில்லை' என்று கேட்டு, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் காரில் ஏற முடியாதபடி தள்ளினர். இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.காங்., கட்சியின் மற்றொரு தரப்பினர், அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றினர். ஆவேசமடைந்த அதிருப்தி நிர்வாகிகள், வீடு கட்டுவதற்காக அருகில் குவிக்கப்பட்டு இருந்த, 'எம்.சாண்ட்' மண்ணை, கார் மீது அள்ளி வீசி, சாபம் விட்டனர்.

தண்ணீர் பாக்கெட்டுகளையும் கார் மீது வீசினர். அத்துடன், காரின் முன்பகுதியில் கைகளால் பலமாக தட்டினர். ஸ்கூட்டர், சைக்கிள் போன்றவற்றை காரின் முன் நிறுத்தி தடுக்க முயன்றனர்.

இந்த தாக்குதலில், காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. காரின், 'வைப்பர்' உடைக்கப்பட்டது; காரின் டயரை பிளேடால் கிழித்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.நிலைமை மோசமடைவதை உணர்ந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மற்றும் காங்., நிர்வாகிகள், காரை முற்றுகையிட்ட அதிருப்தி காங்., நிர்வாகிகளை விலக்கி, தினேஷ் குண்டுராவ் காரில் செல்ல உதவினர்.

இறுக்கமான முகத்துடன் காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இந்த சம்பவம் தொடர்பாக, புதுச்சேரி காங்., நிர்வாகிகள் ஐந்து பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளனர்.



வாசகர் கருத்து (9)

  • Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா

    இப்படி இவர்கள் நிலைமையே மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்த லட்சணத்தில் பப்புவுக்கு மோடி பதில் சொல்லணுமாம்

  • s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்

    இனி இங்கிருப்பதால் எந்த பயனும் இல்லை என்று தலைவர்கள் கருத தொடங்கிவிட்டனர்

  • duruvasar - indraprastham,இந்தியா

    தலயாலே தண்ணி குடிசாலும் ஸ்டாலின் போல் சுயமரியாதை பாரம்பரியதிர்க்கு கிட கூட வரமுடியாது. பகுத்தறிவு பாசறையில் சேர உங்களுக்கெல்லாம் தகுதியே கிடையாது.

  • theruvasagan -

    மானம் ரோஷம் பார்த்தா வாரிசு அரசியல் கட்சிகளில் குப்பை கொட்ட முடியாது. எங்க திராவிட மாடல் உளுத்துப்போன உடன் பருப்புகளை பாருங்க. கொள்கை என்றால் சுயமரியாதை இனமானம் இத்யாதி என்று எல்லாம் சொல்லுவாங்க. ஆனால் சோத்துக்கு சொருக்கு தாளம் போடணும். காப்பிக்கு காலை தூக்கி ஆடணும் என்கிற வாழும் கலையை நன்கு அறிந்து வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்துக்கு ஆயுள் பூராவும் கொத்தடிமையா இருக்கும் கேவலத்தை எந்த மன உறுத்தலும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் பிறவிகள்.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    எல்லோருமே இலவு காத்த கிளிபோல் இருந்தார்கள், மேலும் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற நிலைக்கும் வந்து விட்டார்கள் குடும்பமும் விடுவதாக இல்லை, மூன்றாம் பிறை கமல் போல் எல்லா படைப்புகளில் ஈடுபட்டும் மக்கள் எதற்கும் இடம் கொடுக்காமல் விடாப்பிடியாக இருப்பதால் வேறு வழியே இல்லை, வந்தே மாதரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement