மின் கட்டணம் உயர்த்தினால் பாதிப்பு தான்: கருத்து கேட்பு கூட்டத்தில் தொழில்துறையினர் ஆதங்கம்

தமிழகத்தில், மின் கட்டண உயர்வு அறிவிப்பு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்காக, மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலாவது கருத்து கேட்பு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறையினர் பங்கேற்றனர்.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி, இயக்குனர் சீனிவாசன், பிரபாகரன், மனோகரன் ஆகியோர் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'மின் கட்டணம் உயர்ந்தால் செலவுகள் அதிகரிக்கும். ஏற்கனவே இங்கு வர வேண்டிய ஆர்டர்கள், குஜராத்துக்கு சென்றுவிட்டன. மிகவும் குறைந்த அளவு ஆர்டர்களே இங்கு வருகின்றன. மின் கட்டணத்தை உயர்த்தினால், தொழிலாளர்களை நிறுத்தி விட்டு நாங்களே தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இப்போதைக்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்' என்றனர்.
வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்டதால், மிகவும் சிரமத்தை சந்தித்துள்ளோம். மின்கட்டணமும் உயர்த்தப்பட்டால், எங்கள் தொழில் மட்டுமல்லாமல், கோவையில் பெரும்பாலான தொழில்கள் கடும் பாதிப்படையும்' என்றனர்.

மோட்டார் பம்ப் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'மோட்டார் பம்ப் உற்பத்திக்கான ஜி.எஸ்.டி., வரி, 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜாப்-ஆர்டர்கள் குறைந்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணம் உயர்த்தினால், தொழில் பாதிக்கப்படும்' என்றனர்.தொடர்ந்து, தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்பினர், தொழில்துறையினர் என, 100க்கும் மேற்பட்டோர், கருத்துக்களை தெரிவித்தனர். மதுரை மற்றும் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
கண் துடைப்பு தான்!
கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள், 'அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் இங்கு தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, மின் கட்டண உயர்வை திரும்ப பெறாது என்பது எங்களுக்கு தெரியும். இருந்தும், இதுபோன்ற கண்துடைப்பு கூட்டங்கள் எதற்கு என்று தெரியவில்லை' என, ஆதங்கம் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (5)
மின் கட்டணத்தை உயர்த்துவது என்பது உறுதியான ஒன்று .இதுவும் All Kaatti ராஜன் கம்மிட்டீ போலத்தான்
மத்திய அரசின் அழுத்தம் கொடுத்த அந்தக்கடிதத்தை யாராவது கேட்டு படித்து பார்தார்களா என தெரியவில்லை
மத்திய அரசின் கடிதத்தை யாராவது ...என தெரியவில்லை.
தொழில் துறைக்கு.. தொழிலாளர்களுக்கு.. சம்பளம்.. கொடுப்பதுகூட இழப்புதான்.. உங்கள் மூதாதையர்கள் பசி.. தூக்கம்.. பணம்.. குடும்பம்.. இல்லாத... பல.. மலட்டு.. மனிதர்களை.. பிள்ளைகளாக..பெற்றிருக்க..... வேண்டும்.....
செவிடன் காதில் ஊதிய சங்குதான்