Load Image
dinamalar telegram
Advertisement

புதுச்சேரி கடற்கரையில் சுதந்திர தின விழா...கோலாகலம்

Tamil News
ADVERTISEMENT

முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசின் சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. காலை 9.12 மணிக்கு கடற்கரை சாலைக்கு வந்த முதல்வர் ரங்கசாமியை, தலைமை செயலர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி., மனோஜ்குமார் லால் ஆகியோர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

தேசியக்கொடியேற்றம்




அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தினார்.தேசியகீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி நடந்து சென்று, காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, சுதந்திர தின உரையாற்றினார்.காவல் துறை, சுகாதாரத் துறை பணியாளர்கள், தேசிய மாணவர் படை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் வழங்கி பாராட்டினார்.

அணிவகுப்பு




இதைத்தொடர்ந்து, பல்வேறு படைப்பிரிவினரின் மிடுக்கான அணிவகுப்பு நடந்தது. முதலில் காவல் துறையின் ஆயுதப்படை போலீசார் அணிவகுத்தனர்.தொடர்ந்து போக்குவரத்து, ஐ.ஆர்.பி., காவல் இசைக்குழு, காவல் படை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு துறை, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர், சாரணர்கள், என்.சி.சி., சமுதாய நலப்பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு நடை பெற்றது. அதையடுத்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அணிவகுத்து பார்வையாளர்களின் கரகோஷத்தை அள்ளினர்.

கலை நிகழ்ச்சிகள்
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், ஜவகர் பால் பவன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நடனம், பாரம்பரிய கலைகள் உள்ளி்ட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.சுதந்திர தின விழாவையொட்டி பிற மாநில கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.மத்தியபிரதேசம், கர்நாடாகா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, உத்ரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களின் கலைக் குழுவினர் தங்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தி, கடற்கரை சாலையில் அணிவகுத்து சென்றனர். இது பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது.


ஜெய்ஹோ'




காவல் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்கள் தற்போது காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் ஒன்றிணைந்து 'ஜெய்ஹோ' பாடலுக்கு நடனம் ஆடி பார்வையாளர்களின் கைத்தட்டலை பெற்றனர்.

பங்கேற்றோர்




விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, செல்வகணபதி எம்.பி., என்.ஆர் காங்., எம்.எல்.ஏக்கள் ஆறுமுகம், ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன், பா.ஜ.,எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, ரிச்சர்டு, தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் நேரு, சிவசங்கர், பிரகாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும், கலெக்டர் வல்லவன், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், ஐ.ஜி.,சந்திரன், அரசு செயலர்கள், துறை இயக்குனர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.சுதந்திர தினத்தையொட்டி கடற்கரை சாலை மற்றும் ஒயிட் டவுன் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கலை குழுக்களுக்கு பரிசு

சுதந்திர தின விழாவில் சிறந்த அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி குழுக்களுக்கு பரிசினை முதல்வர் ரங்கசாமி வழங்கி பாராட்டினார்.காவலர் பிரிவில் ஐ.ஆர்.பி., போலீசார், காவலர் அல்லாத பிரிவில் ஊர்க்காவல் படை பெண்கள் பிரிவுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.என்.சி.சி., முதுநிலை ஆண்கள் பிரிவில் விமானப்படை பிரிவினர், முதுநிலை பெண்கள் பிரிவில் கூட்டாக அணிவகுப்பு நடத்திய தரைப்படை, விமானப்படை, கடற்படை பிரிவினர் ஒருங்கிணைந்து பெற்றனர்.என்.சி.சி., இளநிலை பிரிவில் சிறுவர் சாலை போக்குவரத்து அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.அரசு பள்ளிகள் ஆண்கள் பிரிவில் ஜீவானந்தம் அரசு பள்ளியும், பெண்கள் பிரிவில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியும் கேடயம் பெற்றன.தனியார் பள்ளி ஆண்கள் பிரிவில் கதிர்காமம் கே.எஸ்.பி., பள்ளிக்கும், பெண்கள் பிரிவில் புனித பேட்ரிக் பள்ளிக்கும் கேடயம் வழங்கப்பட்டது.சிறந்த கலை நிகழ்ச்சிக்கு, அரசு பள்ளி பிரிவில் வில்லியனுார் கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், தனியார் பள்ளி பிரிவில் விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளிக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஜவகர் பால்பவனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement