லோக்சபாவில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய, 'மின்சார திருத்த சட்ட மசோதா - -2022' மாநில அரசுகளின் எதிர்ப்பால், நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு தி.மு.க., அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பாரதிய மின் தொழிலாளர் அமைப்பு செயலரும், வழக்கறிஞருமான முரளி கிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவில் மின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களும் உண்டு. இருந்தாலும், மின் வினியோகத்தை மாநில அரசுகளே செய்து வருகின்றன. இதனால், நுகர்வோருக்கான சலுகைகளை, மாநில அரசுகளால் வழங்க முடிகிறது. மேலும், மின் கட்டமைப்பையும், மாநில அரசுகளே உருவாக்கி உள்ளன.

'வீலிங் சார்ஜஸ்'
மாநில அரசுகளின் எதிர்ப்புக்கான காரணங்கள் வருமாறு:
* மாநில அரசுகள் உருவாக்கிய மின் கட்டமைப்பை, தனியார் மின் வினியோக நிறுவனங்கள் பயன்படுத்த மின்சார திருத்த சட்டத்தின் 42வது பிரிவு
அனுமதிக்கிறது.
தாங்கள் உருவாக்கிய மின் கட்டமைப்பை, தனியார் நிறுவனத்திற்கு ஏன் தர வேண்டும் என்பது மாநில அரசுகளின் கேள்வி. மின் கட்டமைப்பு பயன்பாட்டுக்கு, தனியார் நிறுவனங்கள் தரும், 'வீலிங் சார்ஜஸ்' என்ற கட்டண தொகை போதுமானதாக இருக்காது என்பதும், மாநில அரசுகளின் வாதம்
* மின் தொடர் கட்டமைப்பை வைத்துள்ள நிறுவனம், அதே பகுதியில் புதிதாக உரிமம் பெறும் நிறுவனத்திற்கு, தன் கட்டமைப்பை தர மறுத்தால், ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டு, உரிய நிவாரணம் பெற முடியும் என புதிய சட்ட மசோதா கூறுகிறது.
இந்த நடைமுறை, ஏற்கனவே உயரழுத்த மின் பயன்பாட்டில் அமலில் உள்ளது. வரும் காலத்தில், வீடுகளுக்கான மின் கட்டமைப்பும் இந்த நடைமுறையின் கீழ் கொண்டு வரப்படும் என, புதிய மசோதா கூறுகிறது
* புதிய மசோதாவல், வீடுகளுக்கான மின் கட்டணம் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 'மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்' என, இந்த சட்ட மசோதாவில் நேரடியாக கூறப்படவில்லை. ஆனால், மின் உற்பத்தி மற்றும் வினியோகம் வரையிலான அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு, மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மாநில மின் வினியோக நிறுவனங்கள், செலவுக்கு ஏற்ற வகையில் மின் கட்டணத்தை நிர்ணயித்து, நுகர்வோருக்கு வழங்கும் மின்சார மானியங்களை அதிகரித்தால், மின் கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிக்க முடியும்.
ஆனால், ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகள், மேற்கொண்டு மின் மானியத்தை அதிகரிக்கும்போது ஏற்படும் கூடுதல் நிதி சுமையை எப்படி சமாளிக்க முடியும் என்பது மாநில அரசுகளின் கேள்வி
* புதிய சட்ட மசோதாவில், 'நேஷனல் லோடு டெஸ்பாட்ச் சென்டர்' என்ற அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய மின் திருத்த சட்டத்தின்படி, 'நேஷனல் லோடு டெஸ்பாட்ச் சென்டர்' என்பது, நாடு முழுதும் மின் வினியோகத்தை முறைப்படுத்தும் அமைப்பு மட்டுமே.
ஆனால், புதிய சட்ட மசோதாவில், மின் வினியோகத்தின் உச்சகட்ட அமைப்பாக, 'நேஷனல் லோடு டெஸ்பாட்ச் சென்டர்' அமைப்பு இருக்கும். இந்த அமைப்பின் எல்லா கட்டுப்பாடுகளையும், மாநில மின் வாரியங்கள் பின்பற்ற வேண்டும்
* மாநில மின் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் மின்சாரம் வாங்குகின்றன. ஆனால், அதற்கான தொகையை முறையாக செலுத்துவதில்லை; கடன் வைக்கின்றன.
இதையும், 'நேஷனல் லோடு டெஸ்பாட்ச் சென்டர்' அமைப்பு கண்காணிக்கும். இதனால் தான் மாநில அரசுகள், சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கின்றன
* புதிய சட்ட மசோதாவால், இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் ரத்தாகும் என்ற அச்சம் உள்ளது. இலவச மின்சாரம் வழங்க, புதிய சட்ட மசோதா தடை செய்யவில்லை. ஆனால், மின்சாரத்திற்கு உரிய கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறுகிறது.
தனியார் நிறுவனங்கள் மின் வினியோக உரிமை பெறும்போது, 1 யூனிட் மின்சாரத்தின் அதிகபட்ச கட்டணம் மற்றும் குறைந்தபட்ச கட்டணத்தை, ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானிக்கும். மாநில அரசுகள் அதைவிட குறைந்த விலையில் மின்சாரத்தை தர
முடியாது. இதனால், இலவச மின்சாரம், மின் கட்டண சலுகை அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே தான் மாநில அரசுகள், புதிய மின் திருத்த சட்டத்தை எதிர்க்கின்றன. ஆனால், இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் தர ஒரு நிதியை அரசு உருவாக்க வேண்டும் என்றே, புதிய சட்ட மசோதா கூறுகிறது.
அதனால், விவசாயிகள், நெசவாளிகள், வீட்டு நுகர்வோருக்கு வழங்க கூடிய சலுகைகள் தொடர வாய்ப்பு உள்ளது
* புதிய சட்ட மசோதாவில் அபராத தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மின் வினியோக நிறுவனம் சட்டத்தை மீறினால், 1 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்க முடியும்.
ஆனால், அபராத நடைமுறையால், மாநில மின் வாரியங்களின் நிதி சுமை அதிகரிக்கும் என்று, மாநில அரசுகள் கூறுகின்றன
* தனியார் நிறுவனங்கள் லாபம் தரும் பகுதிகளில் மட்டுமே, மின் வினியோகத்தில் ஈடுபடும். கிராமங்கள், விவசாய பகுதிகளுக்கான மின் வினியோகத்தை, அரசு தான் மேற்கொள்ள வேண்டும்.
லாபம் தரும் பகுதிகள் தனியாருக்கு சென்று விட்டால், சலுகைகள் தர முடியாது எனக் கூறி, மாநில அரசுகள் எதிர்க்கின்றன
* புதிய சட்ட மசோதா வாயிலாக, தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரம் அதிகரிக்கப்படும். இது, மாநில அரசின் உரிமைகளை மீறும் செயல் எனக் கூறி, மாநில அரசுகள் எதிர்க்கின்றன.
மத்திய அரசு பல மாநிலங்களில் உள்ள மின் வாரியங்களை சீரமைக்க, 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி, மின் வாரிய மறு சீரமைப்பு என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்திஉள்ளது.
இந்த திட்டத்தில் சேர, பல கட்டுப்பாடுகள் உண்டு. மின் வினியோகத்தில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க வேண்டும் என, முக்கியமான விதி உள்ளது.
'ஸ்மார்ட் மீட்டர்'
மேலும், அரசு துறைகள் பயன்படுத்தும் மின்சார கட்டணத்தை கடுமை காட்டி வசூலிக்க வேண்டும்; 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தி, அதற்கேற்ப கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில், தமிழக அரசு இணைந்துள்ளது.
புதிய மின் திருத்த சட்ட மசோதாவை எதிர்க்கும் அரசியல்வாதிகள், ஏற்கனவே மத்திய அரசு திட்டத்தின் வாயிலாக, துணை மின் நிலைய பராமரிப்பு உள்ளிட்ட, பல விஷயங்களில் தனியாரை அனுமதித்து விட்டனர்.
மத்திய அரசு கூறும் பெரும்பான்மையான விஷயங்களை ஏற்று செயல்படும் தமிழக மின் வாரியமும், தமிழக அரசும், புதிய சட்டத்திருத்தம் வாயிலாக, மின் வினியோகத்தில் தனியார் நுழைய போவதாக கூறுவது முழுக்க பொய்.
மத்திய அரசின் மின் வாரிய மறு சீரமைப்பு திட்டம், தமிழக மின் வாரியத்தை காப்பற்ற, பல ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியுள்ளது. அதை வைத்து தான், மின் வாரிய பட்ஜெட்டில் விழுந்த, 'துண்டை' தற்போது நேர் செய்துள்ளனர்.
ஏற்கனவே வாங்கப்பட்ட கடன் தொகை அப்படியே உள்ளது. அதற்கான வட்டி தொகையை குறைப்பது உள்ளிட்ட விஷயங்கள், ஒரு பக்கம் நடக்கின்றன. மின் வாரிய மறு சீரமைப்பு திட்டத்தின் கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்தால், அந்த கடன்களையும் மின் வாரியம் விரைவில் அடைத்து விடலாம்.
தமிழகத்தில் தி.மு.க., அரசு அமைந்த துவக்கத்தில் இருந்தே, மின் வாரியத்தை காப்பாற்றுவதற்காக, மத்திய அரசின் எல்லா திட்டங்களிலும் கையெழுத்திட்டுள்ளது.
ஏமாற்று வேலை
ஆனால், தற்போதைய புதிய சட்ட மசோதாவால் மட்டும் கடும் விளைவுகள் ஏற்பட்டு விடுவதுபோல கூப்பாடு போடுவது, சரியான ஏமாற்று வேலை.
அதுமட்டுமல்ல, 'இ கிளவுட்' என்ற தனியார் நிறுவனம் வாயிலாகத் தான், இனிமேல் மின் வாரியத்துக்கே மின்சாரத்தை வாங்க முடியும்.
அப்படி இருக்கையில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி கொடுத்துள்ள தமிழக அரசு, புதிய சட்ட மசோதாவால், மின் வினியோகத்தில் தனியாருக்கு பலன் என்று சொல்வதும் ஏமாற்று வேலை.
உயர் மின் அழுத்த பயன்பாடு உள்ள 2,000 தொழில் நிறுவனங்கள், தமிழக மின் வாரியத்தை விட, சகாய விலையில் மின்சாரத்தை பெறலாம் என்பதால், தனியாரை நோக்கி சென்று விட்டன.
அது குறித்து கவலைப்படாத தமிழக அரசு, புதிய சட்ட மசோதாவை பற்றி கவலைப்படுவது தான் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் --
வாசகர் கருத்து (14)
யூனிட் நான்கு ரூபாய் விலையுள்ள மின்சாரத்துக்கு , இருபது ரூபாய் கொடுத்ததாக கணக்கெழுதி திருடமுடியாத ஆத்திரம் - எதிர்க்கிறார்கள் ....மாநில அரசு ஊழியர் / அதிகாரிகள் கும்பலை குறைக்கவேண்டும் ..தேவையில்லாமல் கும்பல் கூடி சம்பளம் வாங்கி , வேலை வெட்டிப்பார்க்காமல் , கருணாநிதிக்கு கொடிபிடித்துக்கொண்டு ஊரைக்கெடுக்கும் கூட்டம் தேவையில்லை .....இவர்களை அடித்து வேலைவாங்கவேண்டும் .....
திமுகவின் Side income ல் கை வைத்தால்?
மாநில அரசு தான் அனைத்தையும் செய்கிறது நிலம் தொடங்கி அனைத்து வகை பொருட்களும் மாநில அரசுதான் செய்து வருகிறது இதில் மத்திய அரசு ஏங்கே வருகிறது ? அவர்கள் சட்ட திருத்தும் செய்து யாரை திருப்தி படுத்த இத்தனைநாளும் இல்லாத திருத்தும் இப்ப எப்படி வந்தது ?/ எல்லாம் பண்ணமயம்
இன்னும் எத்தனை வருடங்களுக்கு பணக்காரவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
ஒரு திட்டத்தை ஆதரிக்கிறது என்றால் அது தமிழ்நாட்டிற்கு கெட்டது என்பதும் எதிர்க்கிறது என்றால் அது நல்ல திட்டம் என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.