ரூ.10,697 கோடி: புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அனுமதி; விரைவில் கூடுகிறது சட்டசபை
திட்டக்குழு முடிவு
இந்த பட்ஜெட் இம்மாதத்துடன் முடிவடைகிறது. அதனையொட்டி, மாநில திட்டக்குழு கூடி, ரூ.11 ஆயிரம் கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்திட முடிவு செய்தது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.அதனையொட்டி, கடந்த 10ம் தேதி சட்டசபை கவர்னர் உரையுடன் துவங்கும், மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப் பட்டது.
பிரதமருடன் சந்திப்பு
இந்நிலையில், அரசின் பட்ஜெட்டிற்கு கடந்த 8ம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதையடுத்து, முதல்வர் ரங்கசாமி டில்லி சென்று, பிரதமர் மற்றும் நிதித்துறை அமைச்சரை சந்தித்து பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கவும், மாநில அரசு கோரிய கூடுதல் நிதியை வழங்கவும் வலியுறுத்தி விட்டு வந்தார்.
மத்திய அரசு ஒப்புதல்
இந்நிலையில், புதுச்சேரி அரசின் பட்ஜெட் கோப்பை பரிசீலித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.10,697 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்திட ஒப்புதல் அளித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தார்.அதனையேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாலை 10,697 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
விரைவில் பட்ஜெட்
இதனால், புதுச்சேரி அரசு திட்டமிட்டபடி 11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய, ரூ.303 கோடி வெளியில் கடன் பெற வேண்டும்.அல்லது, மத்திய அரசு அனுமதித்த தொகைக்கு ஏற்ப திட்ட மதிப்பீட்டை மாற்ற வேண்டும்.இதனை செய்து முடித்த பின், ஒத்தி வைக்கப்பட்ட சட்டசபை மீண்டும் கூட உள்ளது.அப்போது, நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, இந்தாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
நிதி தாமதம்... இதுதான் காரணம்!
புதுச்சேரி பட்ஜெட்டுக்கு முதல்வர் கேட்ட நிதி கிடைக்காதற்கு காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.பதுச்சேரி பட்ஜெட் தொடர்பாக, சமீபத்தில் டில்லி சென்ற முதல்வர் ரங்கசாமி, பிரதமர், மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் இல்லாததால் அவரை சந்திக்க இயலாமல் முதல்வர் புதுச்சேரி திரும்பினார்.பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது, 'மத்திய அரசு பட்ஜெட், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்து, உங்களுக்கான பட்ஜெட் நிதியை ஒதுக்கியது. ஆனால் நீங்கள் தாமதமாக திட்ட மதிப்பீடு அனுப்பி உள்ளீர்கள்.
கடந்த நிதியாண்டில் கொடுத்த நிதியை முழுமையாக செலவு செய்யமால் 6 சதவீதம் மீதம் வைத்துள்ளீர்கள். பட்ஜெட்டுக்கு கோரும் நிதியை முழுமையாக அந்த நிதியாண்டிற்குள் செலவு செய்யுங்கள், முறையான திட்ட மதிப்பீடுகளை உரிய காலத்திற்குள் தயார் செய்து வழங்கினால் அதற்கான நிதி கிடைக்கும்' என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.அதை தொடர்ந்து, நேற்று 10,697 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தெரிய வந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!