Load Image
dinamalar telegram
Advertisement

பீஹார் முதல்வராக 8 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு

Tamil News
ADVERTISEMENT
பாட்னா : பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு, 'டூ' விட்டு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து 8 வது முறையாக பீஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்று கொண்டார். லாலு மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார். அவர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், பா.ஜ.,வுடன் நீண்ட காலமாக கூட்டணி வைத்திருந்தார். கடந்த 2015ல் அந்தக் கூட்டணியை முறித்து, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் இணைந்து மகாகட்பந்தன் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் ஆட்சியைப் பிடித்தார். துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஊழல் செய்வதாகக் கூறி, அந்தக் கூட்டணியில் இருந்து 2017ல் விலகினார்.சில மணி நேரங்களில், பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து முதல்வராக நிதிஷ்குமார் தொடர்ந்தார்.

கடந்த 2020ல் நடந்த தேர்தலில், இந்தக் கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது. தங்களை விட குறைந்தத் தொகுதிகளில் வென்றபோதும், பா.ஜ., நிதிஷ்குமாரை முதல்வராக அறிவித்தது.
இதற்கிடையே, இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறுவார் என, கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நிதிஷ்குமார் நேற்று நடத்தினார். பின் கவர்னர் பகு சவுகானை சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்தார். வீடு திரும்பிய நிதிஷ்குமார், ''பா.ஜ.,வுடனான கூட்டணி முடிந்து விட்டது,'' என, அறிவித்தார். அடுத்த தெருவில் இருக்கும் லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு மகாகட்பந்தன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இருந்தனர். நிதிஷ்குமாருக்கு ஆதரவு தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.


இதையடுத்து, லாலுவின் மகன் தேஜஸ்வி உள்ளிட்டோருடன் கவர்னர் மாளிகைக்கு சென்ற நிதிஷ்குமார், மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வராக பதவியேற்க உரிமை கோரினார். கடந்த 2017ல் நடந்தது போலவே, சில மணி நேரங்களில் பல அரசியல் காட்சிகள் அரங்கேறின. அப்போது போலவே, குறைந்த தொகுதிகளில் வென்றிருந்தாலும், நிதிஷ்குமார் முதல்வர் பதவியில் தொடருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. கடந்த, எட்டு ஆண்டுகளில், இரண்டாவது முறையாக பா.ஜ.,வுடன், 'டூ' விட்டு, கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துள்ளார். அதுபோலவே, இரண்டாவது முறையாக, மகாகட்பந்தன் கூட்டணிக்கு தாவியுள்ளார்.

இந்நிலையில், இன்று மதியம் பாட்னாவில் பதவியேற்பு விழா நடந்தது. அதில், பீஹாரின் முதல்வராக 8 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். அவர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்றைய நிகழ்ச்சியில் இருவர் மட்டுமே பதவியேற்று கொண்டனர். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

ஜனாதிபதி ஆட்சிக்கு வலியுறுத்தல்

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் கூறியதாவது:ஒரு நேரத்தில் ஒருவருடன் கூட்டணி வைப்பது, பிறகு கூட்டணியை முறித்து மற்றொருவருடன் சேருவது. அவருடன் கூட்டணியை முறித்து மீண்டும் பழைய கூட்டணிக்கே திரும்புவது என்பது என்ன அரசியல்.மக்கள் அளித்த தீர்ப்பை நிதிஷ்குமார் மீண்டும் அவமதித்துள்ளார். அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அதனால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். விரைவில் சட்டசபைக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



ஒப்பந்தம் என்ன?

நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். இது தொடர்பாக இரு கட்சிகளும் கடந்த சில நாட்களாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, நிதிஷ்குமார் முதல்வராக இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை குறித்து நிதிஷ்குமாரே முடிவு செய்ய அதிகாரம் வழங்கவும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு சபாநாயகர் பதவியை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும், 2025ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



பலம் என்ன?

பீஹார் சட்டசபையில் மொத்தமுள்ள, 243 இடங்களில், தற்போது, 242 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதன்படி, பெரும்பான்மைக்கு, 122 பேரின் ஆதரவு தேவை.நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு, 44 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தனிப்பெரும் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு, 79 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சாவின், நான்கு எம்.எல்.ஏ.,க்கள், ஒரு சுயேச்சை ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதைத் தவிர, காங்கிரசின் 19, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிலிஸ்ட் கட்சியின் 12, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.பா.ஜ.,வுக்கு, 77 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.



ராஜ்யசபா துணைத் தலைவருக்கு நெருக்கடியா?

ராஜ்யசபாவின் துணைத் தலைவர் பதவியில் இருப்பவர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண்சிங். தற்போது, பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் நிதிஷ் குமார் பதவியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இந்நிலையில் ஹரிவன்ஷ் பேசுபொருளாக மாறியுள்ளார்.கடந்த, 2018ல், ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்த போது, ஹரிவன்ஷ் தே.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இத்தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட்ட காங்., மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத்தை தோற்கடித்து, ராஜ்யசபா துணைத் தலைவரானார்.கடந்த, 2020ல் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாகி, இரண்டாவது முறையாக ராஜ்யசபா துணைத் தலைவரானார். இவர் சபையை நடத்தும் விதத்தைப் பார்த்த மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், இவர் சரியான தேர்வுதான் என திருப்தி பட்டனர்.ஆனால், தற்போது பீஹார் அரசியலில் பூகம்பம் வெடித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் நிதிஷ் குமார் பதவியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார்.இதையடுத்து, ஹரிவன்ஷ் நாராயண்சிங் குறித்தும், அவரது பதவியின் நிலை குறித்தும் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசும், எதிர்க்கட்சிகளும் ஒருசேர பேசி வருகின்றன.




நமது டில்லி நிருபர்



வாசகர் கருத்து (74)

  • Karthikeyan - Trichy,இந்தியா

    .இனிமேல் அவனுங்க கூட இருக்கும் மாநிலக்கட்சிகள் வெளியில் வரும்....

  • Karthikeyan - Trichy,இந்தியா

    நிதிஷ்குமார் இப்போது நிம்மதியாக இருப்பார்.

  • ram -

    திருடனுக்கும் திருடனுக்கும் ஒத்துப்போயிடும்.. பார்க்கத்தானே போறோம்.. எத்தனை நாளுக்கு இந்த வேஷம்.. அடுத்தது ஜெயிதான்..

  • Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா

    Pona vaati tejasvi yadav mela muraikedaa sothu sertha kutram kaanamal poivittadha ? Ippodhu tejasvi punidhar aaagitaara ? Arasiyalil ellarumey sandharpa vaadigal nu (bjp utpada) nirubithamaikku miga nandri Thiru Nitish Kumar avargale.

  • வீரா -

    சட்டசபை தேர்தலில் தோற்ற பிஜேபி பொது தேர்தலில் டெல்லியில் 7/7

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement