Load Image
dinamalar telegram
Advertisement

திருத்தணி புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலப் பணிகள் சுறுசுறுப்பு!: 4 மாதத்தில் வாகன ஓட்டிகள் பயன்பாடிற்கு விட திட்டம் 

Tamil News
ADVERTISEMENT
திருத்தணி-திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 36 கோடி ரூபாய் புறவழிச் சாலை பணியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போட்டப்பட்டு இருந்தது.


தற்போது, மேம்பாலம் கட்டும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மீண்டும் துவக்கி உள்ளது. நான்கு மாதத்திற்குள் பணிகளை முடித்து வாகன ஓட்டிகள் பயன்பாடிற்குவிட திட்டமிடப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரத்தில், தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை தடுக்க, 2008ம் ஆண்டு, 47 கோடி ரூபாய் மதிப்பில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், புறவழிச் சாலை அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

ரூ.36 கோடி

இதையடுத்து, புறவழிச்சாலை அமைக்க, 2012ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தி வழங்கியதற்காக, மாவட்ட வருவாய் துறையினருக்கு, 11 கோடி ரூபாய் நெடுஞ்சாலை துறையினர் வழங்கினர்.அதை தொடர்ந்து, 2013ம் ஆண்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு, 36 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து 'டெண்டர்' விடப்பட்டது.பின், 2018ம் ஆண்டு, மே மாதம் சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அரக்கோணம் சாலைக்கு, 30 மீ., அகலம், 3.24 கி.மீ., துாரத்திற்கு, 36 கோடி ரூபாய் மதிப்பில், புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியது.

கடந்த 2019ல், திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர், தார்ச் சாலை ஏற்படுத்தினர். பின், பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே, 5 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம், எம்.ஜி.ஆர்., நகர் அருகே, 10.50 கோடி ரூபாயில் நெடுஞ்சாலைத் துறையால் ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.மேலும், ரயில்வே நிர்வாகத்தால், தண்டவாளத்தின் மீது மேம்பாலம் அமைப்பதற்கு, இரு ஆண்டுகளுக்கு முன், பூமி பூஜை போடப்பட்டது.

பின் ஒப்பந்ததாரர் ஒரு துாண் மட்டும் ஏற்படுத்தினார். அதன்பின் பணிகள் தொடராமல் கிடப்பில் போடப்பட்டன.அதை தொடர்ந்து, திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர், ரயில்வே நிர்வாகத்திற்கு, 5 முறைக்கு மேல் கடிதம் எழுதி ரயில்வே மேம்பாலம் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வந்தனர்.'கொரோனா' தொற்று காரணமாக டிசம்பர் 2021க்குள் முடித்து தருவதாக ரயில்வே நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்புதல் அளித்தது.ஆனால், இதுவரை ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அறிவுறுத்தல்

இதையடுத்து, கடந்த மார்ச் மாதம், 24ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பொறியாளர் எர்வின் மற்றும் ரயில்வே அலுவலர்களுடன் திருத்தணி புறவழிச்சாலை பணிகளை பார்வையிட்டார்.அப்போது, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், ரயில்வே முதுநிலை மேலாளரிடம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இந்நிலையில், இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த ரயில்வே மேம்பாலப் பணி, கடந்த வாரம் 'டெண்டர்' விடப்பட்டு, தற்போது துவங்கப்பட்டு உள்ளது.இரு நாட்களாக மேம்பாலத்திற்கு துாண்கள் அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
பெயர் வெளியிட விரும்பாதரயில்வே துறை அதிகாரி, சென்னை.

நான்கு மாதத்தில் முடிக்க திட்டம்

திருத்தணி எம்.ஜி.ஆர்., சிலை அருகே ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, இரு ஆண்டுகளுக்கு முன் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், பூமி பூஜையுடன் துவக்கி, ஒரு துாண் அமைத்த போது, ஒப்பந்ததாரருக்கும், நிர்வாகத்திற்கும் இடையே ஒரு சில பிரச்னைகளால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.தற்போது புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இப்பணிகள், நான்கு மாதத்திற்குள் முடித்து, வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விட திட்டமிட்டு உள்ளோம்.



புறவழிச்சாலை பயன்கள்

திருத்தணியில் புறவழிச்சாலை அமைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் திருத்தணி நகரத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் தடுக்கப்படும்.வெளி மாநிலங்களில் இருந்து, திருத்தணி நகர் வழியாக, காஞ்சிபுரம், திருப்பதி, சித்துார் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், திருத்தணி பஜாரில் செல்வதற்கு சிரமப்படுகின்றன.புறவழிச் சாலையால் எளிதாக கனரக வாகனங்கள் செல்ல முடியும். திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலை வழியாக செல்வதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைவர்.திருத்தணி நகரில் முருகன் கோவில் உள்ளதால், முக்கிய விழா நாட்களில் பஜாரில் அரை கிலோ மீட்டர் துாரம் வாகனங்கள் கடப்பதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்த்து எளிதாக வாகனங்கள் செல்ல முடியும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement