மனைவி எரித்து கொலை: கணவனுக்கு ஆயுள்சிறை
கோவை;மனைவி மீது கெரசின் ஊற்றி எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள்சிறை விதித்து கோவை தனிக்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை மாவட்டம், ஆனைமலை அருகே ரமணிமுதலிபுதுாரை சேர்ந்தவர் வேலுச்சாமி,80. இவரது மனைவி காளியம்மாள்,70. வேலுச்சாமிக்கு வயதாகிவிட்டதால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவருக்கு சொந்தமான வீடு மற்றும் காலியிடத்தை விற்க முடிவு செய்தார். திருமணமான அவரது மகள் ராஜேஸ்வரி, தந்தையிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய்க்கு வீட்டை விலை பேசி, முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கிரயம் செய்தார்.இதற்கிடையில், காலியிடத்தில் ராஜேஸ்வரி சிறிய அளவில் புதிய வீடு கட்டி பால் காய்ச்ச தேதி குறித்தார். இதையறிந்த வேலுச்சாமி, மீதி பணம் ஒரு லட்சம் கேட்டு மகளிடம் தகராறு செய்தார். அப்போது காளியம்மாள், 'மகள் கஷ்டப்பட்டு வரும் நேரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்' என, சத்தம் போட்டார். இதனால் வீட்டில் பால் காய்ச்சுவதை தடுக்க, அவரது மனைவி காளியம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார்.கடந்த 2020, ஆக., 28ல், பால் காய்ச்சுவதற்கு தயாராக இருந்த நிலையில், நள்ளிரவில் காளியம்மாள் துாங்கிகொண்டிருந்த போது, கெரசின் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு வேலுச்சாமி தப்பினார். கோட்டூர் போலீசார், வேலுச்சாமியை கைது செய்து, கோவை தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட வேலுச்சாமிக்கு ஆயுள்சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!