ADVERTISEMENT
அவிநாசி:பணி முழுமை பெறாததால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் வெள்ளோட்டம் பார்க்கும் வாய்ப்பு தள்ளிப்போகிறது.கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 1,652 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், நீர்வள ஆதார அமைப்பினரின் மேற்பார்வையில், 'எல் அண்ட் டி' நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த, 2019 டிசம்பரில் பணி துவங்கியது.மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், கூடுதுறைக்கு முன், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரியாக வழிந்தோடி செல்லும் மழைநீரை, நீரேற்றம் செய்து, 1,045 குளம், குட்டைகளில் நிரப்பி, நிலத்தடியில் செறிவூட்டச் செய்து, 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் கட்டமைப்பது தான் திட்டம்.பருவமழையால் தற்போது பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது; உபரி நீரும் வெளியேறும். இந்நீரை வைத்து வெள்ளோட்டம் பார்க்க, நீர்வள ஆதார அமைப்பினர் திட்டமிட்டு பணிகள் மேற்கொண்டு வந்தனர். பணி முழுமை பெறாததால், அதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.முதல் மற்றும் இரண்டாம் நீரேற்ற நிலையத்துக்கு உட்பட்ட காலிங்கராயன்பாளையம் பகுதியில், 750 மீ., இரண்டாவது மற்றும் மூன்றாவது நீரேற்ற நிலையத்துக்கு இடைபட்டு, 850 மீ., துாரத்துக்கு பிரதான குழாய் பதிக்க வேண்டியிருக்கிறது. அந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என்ற நிலையில், அவர்களிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது தான் பணி தொய்வடைய காரணம் எனக் கூறப்படுகிறது.விவசாயிகளை ஒருங்கிணைத்து அத்திக்கடவு--அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, திட்டப்பணியை விரைந்து முடிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கொங்கு மண்டலத்தில் இத்திட்டம் அரசியல் ரீதியாக, கணிசமான ஓட்டு வங்கியை அறுவடை செய்து கொடுக்கும் ஆயுதமாகவும், அரசியல் கட்சியினரால் பார்க்கப்படுகிறது. 'அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் தான் தி.மு.க., அரசு மெத்தனம் காட்டுகிறது' என்ற சர்ச்சையும் எழத்துவங்கியுள்ளது.
விரைந்து முடிக்க நடவடிக்கை
திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறுகையில்,''கடந்த மாதம், 31ம் தேதி நிலவரப்படி, 95 சதவீதம் பணி நிறைவு பெற்றுள்ளது. நிலம் கையகப்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியும், 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அரசாணை வந்தவுடன், இழப்பீடு வழங்கப்படும். திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 'எல் அண்ட் டி' நிர்வாகத்தினர் பவானி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நிலம் எடுப்புக்குரிய தொகையில், முன் பணம் வழங்கி, தங்களது பணியை செய்து வருகின்றனர். பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!