மின் வாரிய விளையாட்டு: கோவை மண்டலம் சபாஷ்
கோவை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசு கோப்பைகளை வழங்கினார்.இதில், மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தனர். பரிசுகள் வழங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:மின் வாரிய பணியாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் பணியாற்றுவதற்கான கோரிக்கைகள் முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். சர்வதேச அளவில் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பணியிடம் வழங்குவதில் மின் வாரியம் முதலிடம் பெற்றுள்ளது.மின் வாரியத்தின் மின்னகம் செயலி தொடங்கி வைக்கப்பட்டு, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன; 99 சதவீதம் புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. ஓராண்டில், 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 6 மாதத்தில் இலக்கு அடையப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் பணியில் இருக்கும்போது இறந்துவிடும் மின் வாரிய ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்குக்கான வேலை ஆண்டுக்கு ஒருமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. தற்போது, முதல்வர் உத்தரவின்படி உடனுக்குடன் அந்த குடும்பத்தில் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.எட்டு மண்டலங்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் கிரிக்கெட், கால்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 165 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை மண்டலம் வென்று முதலிடம் பெற்றது. தடகள போட்டியிலும் கோவை மண்டலம் முதலிடம் பெற்றது. ஆண்கள் விளையாட்டில் சென்னை மண்டலம் முதலிடமும், கோவை மண்டலம் இரண்டாம் இடம் பெற்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!