ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால்...நெடுஞ்சாலை துறை அதிரடி
பல்லடம்:பல்லடத்தில், நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலை துறை, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.திருப்பூர் உட்கோட்டத்தின் கீழ், பல்லடம், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை என்.எச்.,67 உள்ளது. போக்குவரத்து நெரிசல், விபத்து, உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, பல்லடம் (அண்ணா நகர்) - காரணம்பேட்டை வரை, 10 கி.மீ., துாரம் உள்ள இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை துறை முன்வந்தது. விரிவாக்க பணிகள் துவங்கி, கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.பல்லடம் நகர பகுதியில் (அண்ணா நகர் - பனப்பாளையம்) விரிவாக்க பணிகள் அடுத்த டெண்டர் விடப்பட்ட பின் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, நகர பகுதியிலும் விரிவாக்க பணிகள் மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: பல்லடம், தாராபுரம் பிரிவு முதல் செட்டிபாளையம் பிரிவு வரை உள்ள, 3 கி.மீ., துாரத்துக்கு, நான்கு வழிச்சாலையாக ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதியில், கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.தவறும் பட்சத்தில், நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டு அரசுக்கு சொந்தமாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!