Load Image
dinamalar telegram
Advertisement

வீடுகளில் புகுந்த தண்ணீரால் மக்கள் கண்ணீரில் தவிப்பு

Tamil News
ADVERTISEMENT
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில், கரையோரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையில், அணைக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீரை அப்படியே வினாடிக்கு 1 லட்சத்து 42 ஆயிரம் கன அடி அளவிற்கு திறந்துவிடப்படுகிறது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் கோவிலடி முதல் அணைக்கரை வரை 60 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் உடைப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் 1.50 லட்சம் மணல் மூட்டைகள் ஆங்காங்கே இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அய்யம்பேட்டை அருகே வெள்ள பாதிப்பு ஏற்பட்ட கரையோர பகுதிகளான பட்டுக்குடி, கூடலுார், புத்துார், குடிக்காடு ஆகிய கிராமங்களில், வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.மேலும் தற்போது நடவு செய்துள்ள குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கின. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.
இதற்கிடையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில், கொள்ளிடம் ஆற்று வெள்ளம் தொடர்பான ஆலோசனை கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமையில் நடந்தது.பின், நிருபர்களிடம் அமைச்சர் மகேஷ் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையில் இருந்து அணைக்கரை வரை 12 மணி நேரம் 81 கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்து, மக்களை சந்தித்து, பாதுகாப்பாக இருக்க அறிவுரை கூறப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் கபிஸ்தலம் பகுதியில் வசித்து வந்த 141 குடும்பங்களை வெளியேற்றி, அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகிறோம். 50 ஆயிரம் மணல் மூட்டைகள் கையிருப்பில் உள்ளன. இன்னும் 76 ஆயிரம் மூட்டைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.கொள்ளிடம் கரையோரப் பகுதியை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement