கொரோனா மரணத்திற்கு இழப்பீடு கேட்டு தாக்கலான வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
திருநெல்வேலியைச் சேர்ந்த தங்கம்மாள் தாக்கல் செய்த மனு:என் கணவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், 2021 மே, 15ல் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு பாதிப்பு இல்லை எனக்கூறி, சாதாரண காய்ச்சலுக்கான மருந்துகளை டாக்டர்கள் வழங்கினர். கணவர் இறந்தார். அவர் கொரோனா பாதிப்பின் காரணமாக இறந்ததாக, மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர்களின் கவனக்குறைவால் கணவர் இறந்தார்.
'சிடி' ஸ்கேன் சோதனை
இழப்பீடு வழங்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், 'அசல் மருத்துவ அறிக்கையில், மனுதாரரின் கணவர் கொரோனாவால் பாதிக்கவில்லை என உள்ளது.
'அடுத்த அறிக்கையில், அவர் கொரோனாவால் இறந்ததாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கவில்லை எனக் கருதி, சரியான சிகிச்சை அளிக்கவில்லை' என, தெரிவித்தது. அரசுத் தரப்பில், 'கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என உறுதிப்படுத்த, ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை செய்யப்பட்டது. அது எதிர்மறையாக இருந்தது.
'சிடி' ஸ்கேன் சோதனையில் கொரோனா இருந்ததை தெளிவுபடுத்தியது. 'கொரோனாவை கண்டறிவதில் மார்பு பகுதியில், 'சிடி' ஸ்கேன் பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக மூச்சுத் திணறலால் அவர் இறந்தார். டாக்டர்களின் கவனக்குறைவால் மனுதாரரின் கணவர் இறக்கவில்லை' என, தெரிவித்தது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் கணவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு பின் இறந்தார் என்பதில் சர்ச்சை இல்லை. அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என, அசல் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் உள்ளது.
சர்ச்சைக்குரிய பிரச்னை
அதே வேளை, கொரோனாவால் இறந்ததாக இறப்புச் சான்றிதழில் உள்ளது உண்மை.இரு தரப்பினரின் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருந்து, சிகிச்சையளித்ததில் கவனக்குறைவு இருந்ததாக உறுதியான முடிவுக்கு வர இயலாது. சர்ச்சைக்குரிய பிரச்னைகள் எழுப்பப் பட்டு உள்ளன. ரிட் மனுவில் தீர்வு காண முடியாது. சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!