Load Image
Advertisement

திருமழிசையில் துணை நகரம் திட்டத்துக்கு...புத்துயிர்!:சர்வதேச நகரமைப்பு குழுவுடன் ஆலோசனை

சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில், புதிய துணை நகரம் உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து, சர்வதேச நகரமைப்பு வல்லுனர்களுடன், வீட்டுவசதி வாரியம் மற்றும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சென்னை பெருநகரில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த, 2008ல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது முழுமை திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் 'திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில், சர்வதேச தரத்தில், புது நகர் திட்டங்கள் தயாரிக்கப்படும்' என, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.இந்த பணிகளுக்காக சி.எம்.டி.ஏ.,வில், அதிகாரிகள் அடங்கிய தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. அத்துடன், புதிய நகரம் திட்டங்களுக்கான சாத்தியக் கூறுகளை விளக்கும் மாதிரிகள் குறித்து விளக்க, இதற்கான கலந்தாலோசனை நிறுவனங்கள் முன்வந்தன.

இதையடுத்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், கலந்தாலோசகர்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், புதிய நகரம் திட்டங்கள், சர்வதேச தரத்தில் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகள் ஆலோசிக்கப்பட்டன. மேலும், இப்பகுதிகளில் தற்போது உள்ள வளர்ச்சி, அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சி, அதற்கான தேவை குறித்து விவாதிக்கப்பட்டதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமழிசை ஏன்?

பூந்தமல்லியை அடுத்த திருமழிசை குத்தம்பாக்கத்தில் துணை நகரம் அமைக்கும் திட்டம், 2006 - 2011 தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது.அப்போது இங்கு, 350 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, வீட்டுவசதி வாரியம் வாயிலாக துணை நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதில், குத்தம்பாக்கம் பகுதியில் விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டதால், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், 2012ல் அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், மீண்டும் திருமழிசை துணை நகரம் திட்டம் அறிவிக்கப்பட்டது.

விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை அணுகியதால், தேவையான நிலங்களை கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், வீட்டுவசதி வாரியத்தின் துணை நகர திட்டம், 120 ஏக்கராக சுருங்கியது.இந்த பின்னணியில், மக்களிடம் நிலத்தை கையகப் படுத்தாமல், ஒட்டுமொத்த பகுதிக்கான வசதிகள், நில வகைபாடுகள் மாறும் வகையில், புதிய நகரம் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.



வளர்ச்சி அதிகரிக்கும்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பரந்துாரில், 5,000 ஏக்கரில் அமைய உள்ளது. ஏற்கனவே, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

மேலும், திருமழிசை குத்தம்பாக்கத்தில், மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து வசதிகளுடன், புதிய விமான நிலையம் இங்கு அமைவது, புதிய குடியிருப்புகளுக்கான தேவையை அதிகரிக்கும்.இதன் அடிப்படையில், இங்கு புதிய நகரம் திட்டத்தை செயல்படுத்த ஊக்கம் அளிக்கும் என்கின்றனர், நகரமைப்பு வல்லுனர்கள்.



 - நமது நிருபர் -



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement