ADVERTISEMENT
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் கஞ்சனுார் அக்னீஸ்வர சுவாமி கோயில் செயல் அலுவலர் நியமனத்திற்கு எதிராக மதுரை ஆதினம் தொடர்ந்த வழக்கில், செயல் அலுவலர் பதவிக்கு 3 பேரில் ஒருவர் பெயரை ஆதினம் குறித்த காலத்திற்குள் தேர்வு செய்து அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.
மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தாக்கல் செய்த மனு:மதுரை ஆதினத்திற்கு சொந்தமாக அக்னீஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இதற்கு செயல் அலுவலரை நியமிக்க வேண்டுமெனில் 3 பேரின் பெயர்களை ஆதினத்திற்கு முறைப்படி அறநிலையத்துறை கமிஷனர் பரிந்துரைக்க வேண்டும்.

அதில் ஒருவரை ஆதினம் தேர்வு செய்வார். அந்நடைமுறையை பின்பற்றாமல் கோயிலுக்கு செயல் அலுவலராக கிருஷ்ணகுமாரை நியமித்து மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவிட்டார். விதிகளை பின்பற்றவில்லை.செயல் அலுவலர் நியமன உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.
நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்தார்.அறநிலையத்துறை தரப்பு: செயல் அலுவலர் பதவிக்கு 3 பேரின் பெயர்களை ஆதினத்திற்கு அறநிலையத்துறை கமிஷனர் பரிந்துரைத்துள்ளார். அதில் ஒருவரை குறித்த காலத்திற்குள் தேர்வு செய்து ஆதினம் அனுப்பும்பட்சத்தில் கமிஷனர் நியமன உத்தரவு பிறப்பிப்பார்.மனுதாரர் தரப்பு: தேர்வு செய்து அனுப்பத் தயார். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: குறிப்பிட்ட காலவரம்பிற்குள் ஒருவர் பெயரை மனுதாரர் தேர்வு செய்து கமிஷனருக்கு பரிந்துரைக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மன்னார்குடி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜியர் மடங்களை தமிழக அரசு எடுத்து செயல் அலுவலர் மூலம் நிர்வகிக்க வேண்டும்.