மதுரப்பாக்கத்தில் 137 வீடுகள் அகற்றம்
தாம்பரம்--மதுரப்பாக்கம் ஊராட்சியில், 137 ஆக்கிரமிப்பு வீடுகள், நேற்று அகற்றப்பட்டன.தாம்பரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மதுரப்பாக்கம் ஊராட்சி, கலைஞர் நகரில் 137 வீடுகள் உள்ளன. இப்பகுதி அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, வருவாய் துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தாம்பரம் தாசில்தார் கவிதாவிற்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், ஆக., 11ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.இதையடுத்து, தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைய நம்பி தலைமையில், தாம்பரம் தாசில்தார் கவிதா மற்றும் வருவாய் துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்ற, நேற்று காலை ஜே.சி.பி., இயந்திரங்களுடன் சென்றனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார், குண்டு கட்டாக துாக்கி கைது செய்தனர். தொடர்ந்து, ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது. 'வீடுகள் அகற்றப்பட்ட இருளர் பகுதியைச் சேர்ந்த, 27 பேருக்கு அகரம் பகுதியில் நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மற்றவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!