பழவேற்காடில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை
பழவேற்காடு--ஸ்ரீஹரிகோட்டாவில், இன்று ராக்கெட் ஏவப்படுவதால், பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை அறிவுறுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஷ்தவான் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. பழவேற்காடு கடல் பகுதியை ஒட்டி இந்த ஏவுதளம் உள்ளது.இன்று காலை 9:00 மணிக்கு ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட் ஏவப்படுகிறது. இது தொடர்பாக, பழவேற்காடு பகுதி மீனவர்களுக்கு, மீன்வளத் துறை சார்பில், சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.சுற்றறிக்கை விபரம்:ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று, ராக்கெட் ஏவுப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராக்கெட் ஏவும் மற்றும் சோதனைக்கு உட்படுத்தும் காலங்களில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.அதன்படி இன்று, பழவேற்காடு பகுதி மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க வேண்டாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பழவேற்காடு பகுதியில் உள்ள அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!