பொன்னேரி ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி
பொன்னேரி--பொன்னேரி ரயில் நிலையத்தில், வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக, நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.பொன்னேரி ரயில் நிலையத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பயணியர் வசதிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பயணியர் பல்வேறு வசதிகளை கேட்டு மனு கொடுத்தனர். அதில், 1 மற்றும் 2வது நடைமேடைகளில், 'லிப்ட்' வசதி ஏற்படுத்திட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகளில் ஏறி, நடைமேம்பாலத்தை அடைந்து, மீண்டும் படிக்கட்டுகளில் இறங்கி தேவையான நடைமேடையை அடைகின்றனர்.இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாவது குறித்தும் பயணியர் வசதிகள் குழுவினரிடம் தெரிவிக்கப் பட்டது.அதைத் தொடர்ந்து, பொன்னேரி ரயில் நிலையத்தில், 'லிப்ட்' வசதி ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கான இரும்பு தளவாடங்கள் கொண்டு வரப்பட்டு அதை நிறுவும் பணிகள் நடைபெறுகின்றன.தற்போது முதல் நடைமேடையில் இரும்பு தளவாடங்களை நேர் நிறுத்தப்பட்டு, நடைமேம்பாலத்துடன் இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இரும்பு தளவாடங்கள், மின் இணைப்புகள், இயந்திரங்கள் என, அடுத்தடுத்த பணிகளை முடித்து, இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ரயில் நிலையத்தில் 'லிப்ட்' வசதி அமைவதன் வாயிலாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதித்தவர்கள் எளிதாக நடைமேடைகளுக்கு செல்ல முடியும் என, பயணியர் தெரிவிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!