ADVERTISEMENT
ஐ.சி.எப்., ரயில்வேயில், வேலை வாங்கி தருவதாக கூறி, 12 லட்சம் ரூபாய் மோசடி செய்து, போலி பணி நியமன ஆணை வழங்கி நண்பரை சிறைக்கு அனுப்பிய, ரயில்வே ஊழியர் நேற்று கைது செய்யப்பட்டார்.வில்லிவாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தில்லைவாணி, 56. இவரது கணவர் சிரார்தனன், 67; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர்களது மகன் சூரிய பிரதாபன், 36; பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.சூரிய பிரதாபனுடன் பிளஸ் 2 வரை படித்த, அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் ரயில்வேயில் வேலை செய்து வருகிறார்.மணிமாறன் கடந்த ஏப்ரல் மாதம், தில்லைவாணியிடம் 'மத்திய அமைச்சர் ஒருவரின் சிபாரிசில் தான், தனக்கு வேலை கிடைத்ததாகவும், சூரிய பிரதாபனுக்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார். மேலும், 'இதற்கு 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும்' எனக் கூறியுள்ளார்.இதை நம்பி, ஏழு தவணைகளாக, 12 லட்சம் ரூபாயை, சூரிய பிரதாபனின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.பணத்தை பெற்ற மணிமாறன், தன் கூட்டாளிகளான நாகேந்திரன் மற்றும் சிங் என்பவருடன் இணைந்து, போலி பணி நியமன ஆணை, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்துள்ளனர்.இதை வைத்து, உ.பி., மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள 'கோண்டா' என்ற இடத்தில் டிக்கெட் பரிசோதகர் வேலை கிடைத்து விட்டதாக கூறி, சூரிய பிரதாபனை அங்கு அழைத்துச் சென்றனர்.பின், பணி நியமன ஆணையை வைத்து, அங்கு வந்த ரயிலில் பணியை துவங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த உண்மையான டிக்கெட் பரிசோதகர் சூரிய பிரதாபன் நடவடிக்கையை பார்த்து, அங்குள்ள போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தார்.லக்னோ போலீசார், சூரிய பிரதாபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தகவல் அறிக்கை, சென்னை ஐ.சி.எப்., போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்படி, ஐ.சி.எப்., போலீசார் வழக்கை விசாரிக்காமல் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தில்லைவாணி இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டார்.நீதிமன்ற உத்தரவின்படி, ஐ.சி.எப்., குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணிமாறனின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!