உணவுத் தொழிலில் களமிறங்கும் இளம் தலைமுறையை ஊக்கப்படுத்தும் வகையில், 'புட் புரோ' எனும் தலைப்பிலான மூன்று நாள் கண்காட்சி, சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் கூட்டமைப்பின் சென்னை பிரிவு சார்பில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம்
துவங்கியது.
இரண்டாம் நாளான நேற்று, வர்த்தக நிறுவனத்தினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.இதில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று பேசியதாவது:நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 15 சதவீதம், தமிழகத்தில் உள்ளன. இதில், 6.89 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. ௮,௦௦௦ வகையான பொருட்களை உற்பத்தி செய்கின்றன.உணவு பதப்படுத்துதல் துறையில், 85 ஆயிரத்து 825 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்து, நாட்டில் ஐந்தாம் இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. 527 தொழில் முனைவோருக்கு, மானியத்துடன் 226 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளது. 240 கோடி ரூபாய் முதலீட்டில், 2,545 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே, தனி பட்ஜெட் போடப்படுகிறது. கொரோனா காலத்தில், விவசாயிகள் மட்டும் முழுமையாக வேலை பார்த்து பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகத்தில், 120 லட்சம் டன் உணவுப் பொருட்களும், 10 லட்சம் டன் காய்கறிகளும் உற்பத்தி செய்கிறோம். இவற்றை பாதுகாக்க, உணவு பதப்படுத்தும் மையங்கள் மிக அவசியமாகிறது. விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.விவசாயிகள் வளர்ச்சிக்காக இதுபோன்ற கருத்தரங்கு, கண்காட்சிகள், தமிழகத்தில் பல நகரங்களில் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், வேளாண் துறை அரசு செயலர் சமயமூர்த்தி, வேளாண் விற்பனை வாரிய இயக்குனர்
நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சின்ன வெங்காயம் தோலுறிக்கும் இயந்திரம்
கோவை, 'லட்சுமி புட் மிஷினரி' நிறுவனத்தின் காய்கறி தோலுறிக்கும் இயந்திரம் குறித்து, நிறுவன மேலாளர் அகிம் கூறியதாவது:சின்ன வெங்காயம், வெங்காயம், பீட்ரூட், கேரட், இஞ்சி போன்ற காய்கறிகளை இந்த இயந்திரத்தில் தோலுறிக்கலாம். ஒரு மணி நேரத்தில், 400 கிலோ காய்கறிகளை தோலுறிக்கும். இந்த இயந்திரத்தில் மீன்களைப் போட்டால், செதில்களை தனியாக பிரித்து விடும். இதன் விலை, 2.25 லட்சம் ரூபாய். 'மல்டி குக்' எனும் கலவை இயந்திரத்தில், ஒரு முறை 200 லிட்டர் வரை சாம்பார், கிரேவி, கோவா, ஊறுகாய் உள்ளிட்டவை தயாரிக்க முடியும். தனிமனிதர் இந்த இயந்திரத்தை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அடி பிடிக்காது. இதன் விலை 2.60 லட்சம் ரூபாய்.கட்டிங் இயந்திரம்சிக்கன், மட்டன் சரியான விகிதத்தில், சரியான அளவுடன் வெட்டு இயந்திரம். ஒரு மணி நேரத்தில் இந்த இயந்திரம் வாயிலாக, 800 கிலோ மட்டன், சிக்கன் வெட்டலாம். இதன் விலை 2.30 லட்சம் ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் இட்லி
கண்காட்சியில், கோவையைச் சேர்ந்த 'பிளாக் பாரஸ்ட்' எனும் நிறுவன அரங்கில் வைக்கப்பட்டுள்ள, ஒரு மணி நேரத்தில், 10 ஆயிரம் இட்லி தயாரிக்கும் இயந்திரம், பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.அந்நிறுவன உரிமையாளர் ஆனந்த் கூறியதாவது:இயந்திரத்தில் மாவை கொட்டினால், ஒரே மணி நேரத்தில் சரியான அளவு எடையுடன், 10 ஆயிரம் இட்லி தயாரித்து விடும். இந்த வகை இயந்திரம், 3,000 மற்றும் 6,000 இட்லிகள் தயாரிக்கும் வகையிலும் உள்ளது.இது மாவை மிச்சப்படுத்தி, கூடுதல் லாபம் தருகிறது. இந்த இயந்திரத்தில், 50 ஆயிரம் மினி இட்லியும் ஊற்றலாம். 6,000 இட்லி ஊற்றும் இயந்திரம் விலை 5.75 லட்சம் ரூபாய்; தேவைக்கேற்ப விலை இருக்கும்.அல்ரா சோனிக் ஸ்வீட், கேக் கட்டிங் இயந்திரத்தை, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் 'சப்ளை' செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து நகரங்களிலும் தேவை
கண்காட்சி குறித்து, பி.வி.பி., டிரேடர்ஸ் உரிமையாளர் முரளி பார்த்தசாரதி கூறியதாவது:இந்த, 'புட் புரோ' கண்காட்சி, தொழில் முனைவோருக்கு மிகவும் அவசிய தேவை. உணவுத் தொழிலில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் பல்வேறு வகையான இயந்திரங்கள், 'பேக்கிங்' இயந்திரங்கள், ஆர்க்கானிக் உணவுப் பொருட்கள் என, சகல விதமான அரங்கங்கள் உள்ளன.இந்த கண்காட்சியில் நடக்கும் கருத்தரங்கம், மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உணவுத் தொழிலில் வளர்ந்து வரும் இளம் தொழில் முனைவோருக்கு உந்து சக்தியாக, இந்த கண்காட்சி விளங்குகிறது. இதுபோன்ற கண்காட்சியை, மாநிலத்தின் ஒவ்வொரு நகரத்திலும் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நவீன 'பேக்கிங்' இயந்திரம்
சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த 'சம்பக்' நிறுவன மேலாளர் சிவக்குமார் கூறியதாவது:ஒரே நேரத்தில் நான்கு பொருட்களை, 10 கிராம் முதல் ௧ கிலோ வரை, இந்த இயந்திரத்தின் வாயிலாக 'பாக்கெட்' செய்ய முடியும்.இதில் அரிசி, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை பாக்கெட் செய்யலாம். ஒரு மணி நேரத்தில், 1,200 பாக்கெட் கிடைக்கிறது. இந்த இயந்திரத்தின் விலை, 4.90 லட்சம் ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் --
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!