Load Image
dinamalar telegram
Advertisement

போலீஸ் டைரி...: திருவள்ளூர்

டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுனர் பலி

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த, எறையூர் கிராமம், செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் விஜயவேலு, 38. கட்டட தொழில் மற்றும் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் மாலை, இவர் டிராக்டரில் வெங்கல் -- ஏனம்பாக்கம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஏனம்பாக்கம் அருகே, சாலையின் இடது பக்கம் இருந்த பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வாலிபர் தற்கொலை

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், ஆட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய பிரகாஷ், 32. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவருக்கு திருமணம் ஆனது. இவரது மனைவி நளினி. கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.கடந்த, 4ம் தேதி தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என நளினி வாதிட்டார். இதில் மனமுடைந்த ஜெயப்பிரகாஷ், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார்.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக கூறினர்.இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

குட்கா கடத்திய 5 பேருக்கு 'காப்பு'

கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். பேருந்தில், வைத்திருந்த கோணி மூட்டை ஒன்றை சோதனையிட்டபோது, அதில், தடை செய்யப்பட்ட 1,446 குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அதை ஓடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த, ஓடிசா மாநிலத்தை சேர்ந்த திலிப்குமார், 38, சுதர்சன், 30, ஆகிய இருவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

* கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியை ஒட்டிள்ள, குடியிருப்பு பகுதி கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், பாப்பன்குப்பம் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மூன்று கடைகளில் இருந்து, 631 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், கடைகளின் உரிமையாளர்களான, ரமேஷ் முகந்தி, 33, விகாஷ் குமார் சிங், 21, அபினேஷ், 27, ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கத்தியுடன் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், இருவர் கத்தியுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும், ஒருவர் தப்பி ஓடினார். கத்தியுடன் பிடிபட்ட நபர், ஆரம்பாக்கம் திடீர் நகரை சேர்ந்த சங்கர், 20, என்பதும், தப்பி ஓடிய நபர், புதுகும்மிடிப்பூண்டி மணிகண்டன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இருவர் மீதும் ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், கைதான சங்கரிடம், விசாரணை நடத்தி வரும் நிலையில், மணிகண்டனை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர் சிக்கினார்

புல்லரம்பாக்கம்: திருவள்ளூர் அடுத்த, தலக்காஞ்சேரி, திரவுபதி அம்மன் கோவில் அருகில், கஞ்சா விற்பதாக புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் சோதனையிட்டு, கஞ்சா விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த, வேலு, 19, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நகரி: சித்துார் மாவட்டம், புத்துார் அடுத்த, கேட்டுபுத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன், 46, இவர், நேற்று முன்தினம், ஈசலாபுரம் அருகே, புறவழிச்சாலை வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விடுதியில் ஒருவர் மர்ம மரணம்

நகரி: நகரி அடுத்த, நின்றாமண்டலம், உருர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுரளி, 48. இவர், கடந்த மாதம், 30ம் தேதி முதல், நகரியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம், இவர் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. இது குறித்து, விடுதி நிர்வாகம், நகரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் அங்கு சென்று, மற்றொரு சாவியினை கொண்டு கதவை திறந்து பார்த்தபோது, பாலமுரளி, கட்டலில் மர்மமான முறையில் இறந்த கிடந்தார்.அவரது மனைவி கீதா அளித்த புகாரையடுத்து, நகரி போலீசார் வழக்கு பதிந்து, பாலமுரளி குறித்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement