Load Image
dinamalar telegram
Advertisement

செய்திகள்சில வரிகளில்...
சாம்ராஜ்பேட் மைதானம் அரசுக்கு சொந்தம்


பெங்களூரு: சாம்ராஜ்பேட்டில் உள்ள ஈத்கா மைதானம் எனும் 2.50 ஏக்கரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் தங்களுக்கு தான் சொந்தம் என்று, கர்நாடக வக்ப் வாரியமும், வருவாய் துறை அதிகாரியும் தனி தனியாக மாநகராட்சி இணை கமிஷனர் சீனிவாசிடம் மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு மனுக்களை ஆராய்ந்து, கர்நாடக அரசுக்கு சொந்தம் என்று நேற்று உத்தரவிட்டார்.

ஒரு வார்டில் ஒரு விநாயகர் சிலை?
பெங்களூரு: கொரோனாவால் கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தியன்று, பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வார்டில், ஒரு விநாயகர் சிலை மட்டுமே வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இம்முறையும் அதே உத்தரவு அமல்படுத்தப்படும் என்று நேற்று தகவல்கள் பரவியது. இது தவறான தகவல், அரசின் உத்தரவை மாநகராட்சி அமல்படுத்தும் என்று தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் விளக்கினார்.

தேர்தலுக்கு தயாராக சிவகுமார் ஆலோசனை
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில், பொம்மனஹள்ளி, பெங்., தெற்கு, பசவனகுடி, பத்மநாபநகர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் இன்றும்; மஹாலட்சுமி லே அவுட், தாசரஹள்ளி, எலஹங்கா, கே.ஆர்.புரம் நான்கு தொகுதிகளில் நாளையும் சம்பந்தப்பட்ட வார்டு காங்கிரஸ் பிரமுகர்களுடன், அக்கட்சி மாநில தலைவர் சிவகுமார் ஆலோசனை நடத்த உள்ளார்.

ம.ஜ.த., கமிட்டிகள் அமைப்பு
பெங்களூரு: மாநகராட்சி தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்கும் வகையில், ம.ஜ.த., சார்பில் எம்.எல்.சி., திப்பேசாமி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு நேற்று அமைக்கப்பட்டது. மேலும், தாசரஹள்ளி எம்.எல்.ஏ., மஞ்சுநாத் தலைமையில், 11 பேர் கொண்ட தேர்தல் பொறுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

1,694 பேருக்கு கொரோனா
பெங்களூரு: பெங்களூரில் 1,105 பேர் உட்பட கர்நாடகா முழுதும் நேற்று ஒரே நாளில், 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 1,741 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 28 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 53 ஆயிரத்து 739 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

எட்டு பேர் கைது
பெங்களூரு: எஸ்.ஐ., தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ஹைதராபாத் -- கர்நாடகா கோட்டாவில் முதல் ரேங்க் பெற்ற பகவந்தராயா, நான்காவது ரேங்க் பெற்றவரும், ராய்ச்சூரில் ஏட்டுமான கல்லப்பா, ரவிராஜ், பீரப்பா, ஸ்ரீசைலா, சித்துகவுடா, சோமநாதா, விஜயகுமார் என எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். அனைவருமே தேர்வின்போது புளுடூத் பயன்படுத்தியவர்கள். ஏற்கனவே கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உறுப்புகளை தானம் செய்த வாலிபர்
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகரின் கொள்ளேகால் அருகே உள்ள சிலகவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராகவா, 34. இவர் கடந்த மாதம் 29ல் இரு சக்கர வாகன விபத்தில் காயம் அடைந்து மைசூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூளைச்சாவு அடைந்த இவரின் உடல் உறுப்புகள் நேற்று தானம் செய்யப்பட்டது. கண், சிறுநீரகம், கல்லீரல் என எட்டு பேருக்கு இவரது உறுப்புகள் பொருத்தப்பட்டது.

ரோஷன் பெய்க் துபாய் செல்ல அனுமதி
பெங்களூரு: காங்கிரசின் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் மீது ஐ.எம்.ஏ., நிதி நிறுவனம் தொடர்பான மோசடி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் வெளிநாடு செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது மருமகளின் சகோதரனுடைய திருமணம் துபாயில் நடப்பதால் பங்கேற்க அனுமதி அளிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 15 நாட்களுக்குள் சென்று வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.

கவர்னர் பெயரில் மோசடி?
பெங்களூரு: பல்லாரியை சேர்ந்தவர் சதருல்லா கான், 35. இவர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் செயலர், பல்கலைகளின் செனட் உறுப்பினர் என கூறி கொண்டார். போலி அடையாள அட்டையை காண்பித்து பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக்குவதாக கூறி பணம் மோசடி செய்ய முயற்சித்தார். தகவல் அறிந்த கவர்னர் மாளிகை ஊழியர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சி.சி.சி., போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.

அகாடமிகளுக்கு நியமனம்
பெங்களூரு: கன்னட மற்றும் கலாச்சார துறையின் கீழ் வரும், 11 வெவ்வேறு அகாடமிகளுக்கு புதிதாக தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்களை நேற்று நியமித்து அரசு உத்தரவிட்டது. பெரும்பாலும் கடலோரத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement