Load Image
dinamalar telegram
Advertisement

தாம்பரம் குடிநீர் பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி : கடல்நீரில் இருந்து 8 கோடி லிட்டர் வினியோகிக்க ஏற்பாடு

தாம்பரம், :தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக, நாள் ஒன்றுக்கு, எட்டு கோடி லிட்டர் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டம் பயன்பாடிற்கு வந்தால், பல ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தென்சென்னை புறநகரில் தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், அனகாபுத்துார், பம்மல் நகராட்சிகள்; பெருங்களத்துார், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகள் ஆகியவற்றை இணைத்து, புதியதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.பத்து உள்ளாட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக உருவாக்கப்பட்டாலும், குடிநீர் வினியோகத்தை பொருத்தவரை, தனித்தனி ஆதாரங்கள் மூலமே பெறப்படுகின்றன.தாம்பரத்தை பொருத்தவரை, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு, பாலாறு படுகையில், வில்லியம்பாக்கம், உள்ளாவூர் பகுதிகளில் நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்கப்பட்டு, 60 கி.மீ., துாரத்திற்கு குழாய் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.பாலாற்றில் மணல் எடுத்ததன் விளைவாக, தண்ணீர் மட்டம் குறைந்து, தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. கிடைக்கும் குடிநீரை பகிர்ந்து வழங்குகின்றனர். பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை, சிட்லப்பாக்கம் பகுதிகளை பொருத்தவரை, ஆலந்துார்- - பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் பெறப்படுகிறது.கோடையில், குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறையும் போது, பல்லாவரம் பகுதிக்கான வினியோகம் தடைபடுகிறது.குறைந்தளவு தண்ணீரே கிடைக்கிறது. இதை கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பம்மல், அனகாபுத்துார் பகுதிகளுக்கு செங்கழுநீர் கல்குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து, தினசரி, 25 லட்சம் லிட்டர் வினியோகம் செய்கின்றனர். திரிசூலம், மூவரசம்பேட்டை கல் குவாரிகளில், சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணி முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்கரணை பகுதிகளை பொறுத்தவரை, உள்ளூர் நீராதாரங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதனால், அப்பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம், தாம்பரம் மாநகராட்சியுடன், சுற்றியுள்ள 15 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. அதனால், அந்த ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து பகுதிகளையும் சேர்த்து, ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, திட்ட அறிக்கை தயார் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரி, ஆழ்துளை கிணறு, பாலாறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வயிலாக, குடிநீர் பெற்று, மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகிக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.நெம்மேலியில், கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அத்திட்டத்திற்கான குழாய் மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக பதிக்கப்படுகிறது.இதில், ஈச்சங்காடு சந்திப்பில் இருந்து, பல்லாவரம்- - துரைப்பாக்கம் சாலை வழியாக, குரோம்பேட்டை சாந்தி நகர் குடிநீர் தொட்டிக்கு குழாய் இணைக்கப்பட உள்ளது.அதேபோல், மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி சாலை வழியாக கிழக்கு தாம்பரம் காந்தி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் ஒரு இணைப்பு வழங்கப்பட உள்ளது. பணிகள் முடிந்து, இத்திட்டம் பயன்பாடிற்கு வந்தால், நாள்தோறும் 8 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்.இதை வைத்து, மாநகராட்சி பகுதி முழுமைக்கும் பற்றாக்குறை இன்றி குடிநீர் வினியோகம் செய்யலாம். அதனால், இத்திட்டத்தை திட்டமிட்டப்படி முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பணிகள் ஜரூர்

நெம்மேலியில், இரண்டாம் கட்டமாக, 1,259.38 கோடி ரூபாயில், கூடுதலாக, 15 கோடி லிட்டர் திறன் கொண்ட, கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 2020, அக்டோபர் மாதம் துவங்கிய பணி, வேகமாக நடந்து வருகிறது. நெம்மேலியில் இருந்து, தென்சென்னை பகுதிக்கு, 47.35 கி.மீ., நீளத்தில் குழாய் பதிக்க திட்டமிட்டு, 39 கி.மீ., நீளத்தில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில், குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, வினியோகம் துவக்கப்படும் என்று தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement