போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்; மழை பாதிப்பு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு
பெங்களூரு-மழை பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும்படி, 17 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
நிவாரண பணிகளுக்காக 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.இது குறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை, பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள வீட்டில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்.மழை பாதித்த, 17 மாவட்ட கலெக்டர்கள், வருவாய் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.நிலச்சரிவு, வீடுகள் சேதம், வெள்ள பெருக்கு, விளைபயிர் நாசம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:ஏற்கனவே உள்ள தேசிய, மாநில இயற்கை பேரிடர் மீட்பு குழுவுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.மாநில இயற்கை பேரிடர் மீட்பு குழுக்கள் உருவாக்கப்படும். எத்தகைய சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.நிவாரண பணிகளுக்காக 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு, கால்நடைகள் இறப்பு, வீடுகள் சேதம் ஆகியவற்றிற்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும்.போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும். மின் கம்பங்கள் சரி செய்யும் போது எச்சரிக்கை வகிக்க வேண்டும்.திடீரென வெள்ள பெருக்கு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் போது, ஆற்றங்கரை ஓர மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.குடகு, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வரும் பகுதிகளில் வசிப்போரை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும். நிவாரண முகாம்களில் தரமான சமைத்த உணவுடன், உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!