சினி கடலை
பெயர் வாங்கி கொடுத்த 'அம்மா'
கே.ஜி.எப்., திரைப்படம், பலரின் வாழ்க்கையை மாற்றியது. இதில் அர்ச்சனா ஜோயிசும் ஒருவர். ஹீரோவின் தாயாக நடித்திருந்த இவர், தற்போது 'கே.ஜி.எப்., அம்மா' என்றே பிரபலமடைந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ''அம்மா கேரக்டரில் நடிக்க, முதலில் நான் சம்மதிக்கவே இல்லை. சிறிய வயதில், அம்மா வேடத்தில் ஏன் நடிக்க வேண்டும் என தோன்றியது. படக்குழுவினர், என் கதாபாத்திரத்தை பற்றி விவரித்தனர். அரை மனதாக நடிக்க ஒப்புக்கொண்டேன். என் கதாபாத்திரம் பேசப்படுகிறது.இப்போது 40 -- 50 வயதுள்ள ஹீரோக்களுக்கு, அம்மாவாக நடிக்கும்படி அழைக்கின்றனர். அர்ச்சனா என்றால் மிரள வேண்டும். அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. வரலாற்று படத்தில் நடிக்கவும் எனக்கு விருப்பம்,'' என்றார்.
ரசிகர்களுக்கு நன்றிக்கடன்
கன்னட திரையுலகின் 'லேடி சூப்பர் ஸ்டார்' மாலாஸ்ரீ, 1990 களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். தயாரிப்பாளர் ராமை திருமணம் செய்து கொண்ட பின், படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். சமீப ஆண்டுகளாக ஆக்ஷன் படங்களில் நடித்தார். தற்போது இவரது மகள் ராதனா ராம், நாயகியாக திரையுலகில் நுழைய தயாராகிறார். இவரது இயற் பெயர் அனன்யா. படத்துக்காக பெயர் மாற்றம் செய்துள்ளார். மகளின் திரையுலக பிரவேசம் குறித்து, மாலாஸ்ரீயிடம் கேட்ட போது, ''கன்னட ரசிகர்கள், என் மீது காண்பித்த அன்புக்கு, நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதே அன்பை என் மகள் மீதும் ரசிகர்கள் காண்பிக்க வேண்டும்,'' என்றார்.
புற்றுநோய் சிகிச்சைக்கு மருந்து
ராஜு தேவசந்திரா இயக்கும், செகன்ட் ஆப் திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இது அவர் இயக்கும், நான்காவது திரைப்படம். மஞ்சுளா ரமேஷ் திரைக்கதை எழுதியுள்ளார். படக்குழுவினர் கூறுகையில், ''ஆரோக்கியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையாகும். குழந்தை பிறந்த சில நாட்களுக்கு பின், தொப்புள் கொடி அறுந்து விழும். இதை சேகரித்து வைக்கின்றனர். இதை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். இந்த கதைக்கருவை மையமாக வைத்து, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை புனித் ராஜ்குமார் தயாரிப்பதாக இருந்தது. விதி வசத்தால் நடக்கவில்லை. வேறு படக்கம்பெனி தயாரிக்கிறது," என்றனர்.
நடிப்பு ராட்சசன்
நடிகர் தனஞ்செயா, நடிகை ரசிதா ராம் முதன் முறையாக ஜோடி சேர்ந்த, மான்சூன் ராகா ஆகஸ்ட் 19ல் திரைக்கு வருகிறது. படம் பற்றி ரசிதா ராமிடம் கேட்ட போது, ''தனஞ்செயா உண்மையில் நடிப்பு ராட்சசன் தான். அவருடன் நடிப்பது சேலஞ்சிங்காக இருந்தது. படத்தில் வசனங்கள் மிகவும் நன்றாக உள்ளது. மழைக்காலத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் மழைக்காலத்திலேயே திரைக்கு வரும் என, எதிர்ப்பார்க்கவில்லை. இதில் என் கதாபாத்திரத்தை, அற்புதமாக காண்பித்துள்ளனர். இத்தகைய படக்குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது,'' என்றார்.
உணர்வு பூர்வமான கதை
நடிகர் ஜக்கேஷ் நடிப்பில், விஜயபிரசாத் இயக்கிய, தோத்தாபுரி இரண்டு பாகமாக வெளியாகிறது. செப்டம்பர் 30ல் முதல் பாகம் திரைக்கு வருகிறது. படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. டிரெய்லர், பாடல் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்தது. படத்தை பற்றி ஜக்கேஷ் கூறுகையில், ''படம் வெளியான பின், என்னை, பெண் குலம் அதிகமாக நேசிக்கும். ஏனென்றால் அவ்வளவு பொறுப்புள்ள கதாபாத்திரம். மக்களுக்கு மிகவும் நெருக்கமானது. படத்தை பார்ப்பவர், தன் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பார். உணர்வு பூர்வமான கதை கொண்டதாகும்,'' என்றார்.
வழுக்கி விழுந்த ராதிகா
சாண்டல்வுட் நடிகை ராதிகா குமாரசாமி, இருபது ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறார். நாயகியாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார். இவருக்கு எண்ணிலடங்கா ரசிகர்கள் உள்ளனர். இவர் சில நாட்களுக்கு முன், நடனமாடும் போது, கால் தவறி கீழே விழுந்தார். இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில், பகிர்ந்து கொண்டார். இதை கவனித்த ரசிகர்கள், 'விழிப்புடன் நடனமாட வேண்டும். இடுப்பில் காயமடைந்தால், பிரச்னை ஏற்படும். நடனமாடும் போது கால் வழுக்காத வகையில், தரை விரிப்பு போட வேண்டும்' என, பல விதமான ஆலோசனைகள் கூறியுள்ளனர்.
புது விதமான காதல் கதை
சஷாங்க் இயக்கிய, 'லவ் 360' வரும் 19ல், திரைக்கு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ரச்சனா இந்தர், நாயகி. படத்தின் போஸ்டர், டிரெய்லர், மூன்று பாடல்கள் வெளியாகி, எதிர்ப்பார்ப்பை மீறி பலத்த வரவேற்பு பெற்றது. தற்போது பட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். படக்கதை தொடர்பாக, இயக்குனர் கூறுகையில், ''இது லவ், கிரைம், திரில்லர் படமாகும். பத்தோடு பதினொன்றாக இருக்காது. அழகான காதல் கதையை, புதுவிதமாக காண்பித்துள்ளோம். அர்ஜுன் ஜன்யா இசையமைப்பில், பாடல்களும் கூட பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!