Load Image
Advertisement

சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில். ரெய்டு

Tamil News
ADVERTISEMENT
சென்னை :சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில், நேற்று வருமான வரித் துறையினர் 2வது நாளாக அதிரடி 'ரெய்டு' நடத்தினர். சென்னை, மதுரையில் 40 இடங்களில் சல்லடை போட்டு தேடியதில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும்
சொத்துக்களை கண்டுபிடித்துள்ளனர்.


* ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர், 'கோபுரம் பிலிம்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனுஷ் நடித்த தங்க மகன், விஷால் நடித்த மருது உட்பட, சில படங்களை தயாரித்துள்ளார். பல படங்களுக்கு கடன் வழங்கி வருகிறார். வரி ஏய்ப்பு செய்வதாக, அவர் மீது வருமான வரித் துறைக்கு புகார் சென்றது.

அதிரடி சோதனை



இதையடுத்து, சென்னை தி.நகர், ராகவய்யா தெருவில் உள்ள கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல, அன்புச்செழியனுக்கு தொடர்புடைய, மதுரை காமராஜர் சாலையில் தெப்பக்குளம் அருகே, இரண்டு வீடுகள்; கீழஆவணி மூலவீதியில் சினிமா வினியோக அலுவலகம்; தெற்கு மாசிவீதியில் 'பைனான்ஸ்' அலுவலகம்; நேதாஜி சாலையில் உள்ள அலுவலகம் ஆகியவற்றிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. மேலும், செல்லுார் 50 அடி சாலையில், 'கோபுரம் சினிமாஸ்' என்ற அலுவலகம் மற்றும் காமராஜர்புரம் பகுதியில் உள்ள பழைய வீட்டிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.


* 'வி கிரியேஷன்' மற்றும் 'கலைப்புலி' தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருபவர் கலைப்புலி தாணு. இவர், தனுஷ் நடித்த அசுரன், விஜய் நடித்த தெறி, ரஜினி நடித்த கபாலி உட்பட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். இரவின் நிழல், வேலையில்லா பட்டதாரி உட்பட பல படங்களை வினியோகம் செய்துள்ளார்.சென்னை தியாகராயர் நகர், பிரகாசம் சாலையில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடுகளில், நேற்று வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.


* 'கைதி, சுல்தான்' போன்ற படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின், தி.நகர் அலுவலகம், வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


* 'டெடி, தானா சேர்ந்த கூட்டம், கொம்பன்' உட்பட ஏராளமான படங்களை தயாரித்த ஞானவேல்ராஜாவின், 'ஸ்டூடியோ கிரீன்' நிறுவனத்தின் தியாகராய நகர், தணிகாசலம் சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


* 'விஸ்வாசம், விவேகம், தொடரி' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன். சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள இவரது அலுவலகம் மற்றும் வீடுகளில், நேற்று சோதனை நடத்தப்பட்டது.வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள், திரையரங்குகள் என, சென்னை மற்றும் மதுரையில் 40 இடங்களில், 200க்கும் அதிகமான வருமான வரித் துறை அதிகாரிகள், நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். 2வது நாளாகவும் தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை தொடர்ந்தது.


இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் உட்பட, பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. சோதனை தொடர்கிறது. சோதனை முடிந்த பின்னரே, அவற்றின் மதிப்பு தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.




ரூ.77 கோடி பறிமுதல்!

மதுரை, காமராஜர்புரத்தைச் சேர்ந்த அன்புச்செழியன், சினிமா தயாரிப்பாளராக மாறி, சென்னைக்கு இடம் பெயர்ந்தார். சினிமா தயாரிப்புக்கு நினைத்த நேரத்தில், எவ்வளவு தொகையையும் கடனாக வழங்கும் செல்வாக்கு உள்ளவர்.இவரது வீடு, அலுவலகங்களில் நேற்று நடந்த சோதனையில் சிக்கிய பணம், சொத்து ஆவணங்கள் பற்றிய விபரங்களை, அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். கடந்த 2020ல் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில், இதேபோல் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது பிகில் பட வசூல் தொடர்பாக சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், அந்த படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரம் அலுவலகம் மற்றும் தியேட்டர்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத,77 கோடி ரூபாய் ரொக்கம், சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், பின் தேதியிட்ட காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பிகில் படத்தின் வசூலில், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


காரணம் அந்த நடிகரா?



-தமிழ் திரையுலகில், நேற்று ஒரே நேரத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த வருமான வரித் துறை சோதனை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் இரண்டரை ஆண்டுகளாக முடங்கியிருந்த தமிழ் திரையுலகில், விக்ரம் உள்ளிட்ட சில படங்களின் வெற்றி, சினிமா வியாபாரத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. கடந்த, 2021- - 22ம் நிதியாண்டுக்கான கணக்கு தாக்கல் முடிந்த நிலையில், நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள், 40க்கும் மேற்பட்ட இடங்களில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களை குறி வைத்து 'ரெய்டு' நடத்தினர்.இதில், கலைப்புலி தாணு, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, 'சத்யஜோதி பிலிம்ஸ்' தியாகராஜன் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது.


குறிப்பாக, மத்திய அரசை விமர்சித்து வரும் நடிகர் சூர்யாவின் உறவினர் மற்றும் நண்பர்களான ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகளில் நடந்த ரெய்டு, சூர்யாவுக்கான எச்சரிக்கையாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதில் தயாரிப்பாளர் தாணு, தற்போது சூர்யா நடிக்கும், வாடிவாசல் படத்தை தயாரித்து வருகிறார். அன்புச்செழியன், இதற்கு முன் பல ரெய்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். தயாரிப்பாளராக மட்டுமின்றி, பல படங்களுக்கு பைனான்சியராக உள்ளார். சமீபத்தில், இவரது இல்லத்திருமண விழா தடபுடலாக நடந்தது.



வாசகர் கருத்து (16)

  • vbs manian - hyderabad,இந்தியா

    நேர்மை நீதி ஒழுக்கம் என்று படங்களில் வாய் கிழிய வசனம் பேசும் ஹீரோக்கள் இந்த ரைடுகளை பற்றி என்ன சொல்வார்கள்.சினிமா என்ற ஜிகினா கப்பல் கருப்பு என்ற கடலில் ஆனந்தமாக பயணிக்கிறது.ஹாலிவுட் பொலிவுட்டில் இது போன்ற செய்திகள் வருவதில்லையே.

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    சினிமாக்காரர்களுக்கு மறைக்கிறதுக்கு நெறைய விசியம் இருக்கும். இருந்தாலும் பாருங்க அவிங்க அவுங்களை பெரிய போராளி ரஸ்தாளி பெருச்சாளி அது இதுன்னு கற்பனை பண்ணிக்கிட்டு, விவரம் தெரியாமல் சும்மா மத்திய அரசுக்கு எதிரா கருத்துப்பதிவு செய்ய கிளம்பிருவாய்ங்க கண்ணாடி வீட்டுல இருந்து கல் எறியறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிக்க மாட்டாங்களா?

  • ஆரூர் ரங் -

    சமீபத்தில் வெளியான சின்னவரின் படம் படு தோல்வி. ஆனால் ஹவுஸ்ஃபுல் ஆக ஓடியதாக பொய்க்கணக்கு காட்டி கருப்பை வெள்ளையாக ஆகியுள்ளாராம். அரசே புக்கிங் ஆப் துவக்கி அதன் மூலம்👌 மட்டுமே ரிசர்வேஷன் செய்தால் மட்டுமே இந்த ஃபிராடு நிற்கும். பெரும்பாலான படத் தயாரிப்பில் கூட ஏகப்பட்ட பொய் செலவுக் கணக்குகள்.

  • சீனி - Bangalore,இந்தியா

    ஓடாத படத்தில் 1000ம் கோடி லாபம் வந்தது என்று கணக்கெழுதுவார்கள்.

  • Rajan -

    கருப்பு பணத்தின் சுரங்கம் அன்புச் செழியன், அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தின் அடைக்கலம் அன்புச் செழியன். பத்தே நிமிடங்களில் பத்து கோடி CASH ரெடி செய்யும் CAPACITY அவரிடம் உள்ளது. ஒரு ரூபாய் வட்டிக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பெற்ற கருப்பு பணத்தை சினிமா பட தயாரிப்பாளர்களுக்கு ஐந்து ருபாய் வட்டிக்கு கொடுப்பவர். இதெல்லாம் நான் சொல்லலீங்க சவுக்கு சங்கர் You TuBE ல் கூறியுள்ளார் மாதேஷ் டன் உரையாடும் போது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement