Load Image
Advertisement

மிரட்டும் குரங்கு அம்மை: உஷார் நடவடிக்கை அவசியம்

 மிரட்டும் குரங்கு அம்மை: உஷார் நடவடிக்கை அவசியம்
ADVERTISEMENT
நம் நாட்டில் கொரோனா தொற்று பரவல், இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, மற்றொரு சவாலாக குரங்கு அம்மை உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, உலக சுகாதார நிறுவனம், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.

தற்போதைக்கு குரங்கு அம்மையானது, 75 நாடுகளில் பரவியிருக்கிறது. 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளனர். ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தான், இந்நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.


இந்தியாவிலும் இந்த நோய் நுழைந்து, கேரளாவில் மூன்று பேருக்கும், புதுடில்லியில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதேநேரத்தில், கேரளாவில் இந்த நோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து விட்டார் என்ற தகவல் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.


கடந்த 2020ம் ஆண்டின் முற்பகுதியில், கொரோனா பரவல் வேகம் எடுத்த போது, மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் துறையினர் மத்தியில், பயங்கர குழப்பம் மற்றும் பீதி உருவானது. அதன்பின், சுதாரித்துக் கொண்டு அவற்றை சரியான முறையில் கையாண்டு சாதித்தனர். அதேபோல, இந்த நோய் தடுப்பு விஷயத்திலும் செயல்படுவர் என்று நம்பலாம்.


குரங்கு அம்மையானது வைரஸ்களால் உருவாவது; பெரியம்மை போன்ற அறிகுறிகளுடன் பரவக்கூடியது. மேலும், இந்த நோயானது, மனிதரிடமிருந்து மனிதருக்கும், விலங்குகளிடம் இருந்து மனிதருக்கும் பரவும். தீவிர சிகிச்சை இல்லாமலேயே, சில வாரங்களில் நோயாளிகள் குணமடைகின்றனர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.அதனால், குரங்கு அம்மை பாதித்தவர்கள் உயிர்இழப்பது என்பது அரிதாகவே இருக்கும். இந்த நோய் பரவல் குறித்து பெரிய அளவில் பீதி அடைய தேவையில்லை.


அதே நேரத்தில், மக்கள்தொகை அதிகம் நிறைந்த நம் நாட்டில், இந்த நோய் பரவத் துவங்கினால், அதன் வேகம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. எனவே, இந்நோய் பரவலை தடுக்கும் விஷயத்தில், எந்த விதமான மெத்தனத்திற்கும் இடம் தரக்கூடாது என்பதே நிதர்சனம். ஆதலால், குரங்கு அம்மை பாதித்தவர்களை உடனுக்குடன் தனிமைப்படுத்துவதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், குறிப்பிட்ட நாட்கள் வரை தனிமைப்படுத்தி, தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.


கொரோனா தொற்று பரவல் காலத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணியரை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன்பின் அவர்களை வீடுகளுக்கும், செல்ல வேண்டிய இடங்களுக்கும் போக அனுமதித்தது போல, தற்போது, சர்வதேச விமான நிலையங்களில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், குரங்கு அம்மை என்ற பெயரில், பயணியரை துன்புறுத்துவதும் நிகழ்ந்து விடக்கூடாது. இந்த நோய்க்கு பெரியம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த சில வாரங்களில், நம் நாட்டில் இந்த நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்தால், அதை எதிர்கொள்ளும் வகையில், நாமும் பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது அவசியம். கொரோனா தொற்று பரவல் தடுப்பு விஷயத்தில் முன்னதாகவே தடுப்பூசி கண்டுபிடித்து, உயிரிழப்பை பெரும் அளவு தடுத்தது போல, இந்த விஷயத்திலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குரங்கு அம்மைக்கான பிரத்யேக தடுப்பூசி தயாரிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, எந்த சூழ்நிலையிலும், குரங்கு அம்மை பாதிப்பு கட்டுக்கடங்காமல் செல்வதை தவிர்க்கலாம்.


அத்துடன், குரங்கு அம்மை பாதிப்பு குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக, தவறான தகவல்கள் பரவுவது தடுக்கப்பட வேண்டும். நோய் குறித்த தகவல்களை வெளிப்படை தன்மையுடன் வழங்குவதன் வாயிலாக, மக்களிடையே அச்ச உணர்வு உருவாவது தவிர்க்கப்படும். தற்போதைய சூழ்நிலையில், குரங்கு அம்மையை கொரோனா வைரஸ் பரவலுடன் ஒப்பிட முடியாது என்றாலும், அதை குறைத்து மதிப்பிடவும் கூடாது; உஷாராக இருப்பது அவசியம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement