கடலூர்: கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று (ஜூலை 23 )அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர் கணசேன், ஊர் மக்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 13 ம் தேதி பள்ளி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் சில அமைப்பினர் கடந்த ஞாயிறு ( ஜூலை-17) போராட்டம் நடத்தினர். வன்முறையாக மாறிய போராட்டத்தால் பள்ளி சூறையாடப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
பள்ளியில் இருந்த கணினி மற்றும் சான்றிதழ்கள் , ஆவணஙகள் எரிந்து சாம்பலாகின. வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க கோர்ட் உத்தரவுப்படி சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் பலர் சில அமைப்பினர் தூண்டுதலின் பேரில் வன்முறையில் இறங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடந்து வருகிறது. பெற்றோர்கள் மறு பிரேத பரிசோதனை கேட்டதன்படி மீண்டும் ஒரு முறை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று ( ஜூலை-23) மாணவியின் உடல் வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி முன்னிலையில் பெற்றொரிடம் ஒப்படைக்கப்பட்டது.
![Latest Tamil News]()
முன்னதாக மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன், கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூருக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர் கணசேன் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வீர வணக்கம், வீர வணக்கம் என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டது.
நீதி மன்றம் சொன்னது போல அமைதியான முறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நீதி மன்றம் உன்மைய வெளி கொண்டு வர உதவுமா