சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 24 வரை தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியாக நீண்ட நாட்களாக தாமதமான நிலையில், இன்று (ஜூலை 22) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவிகள் 94.54 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.25 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வை 14,35,366 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்கள் https://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவு எண், பள்ளிக்குறியீடு எண், அட்மிட் கார்டு எண் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து தங்களது முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம். மேலும், cbse12 என டைப் செய்து இடைவெளிவிட்டு, பதிவு எண்ணை டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பியும் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் வாழ்த்து
மனிதகுலம் பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வுக்கு தயாராகி நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளீர்கள். சிபிஎஸ்இ பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற எனது அனைத்து இளைய நண்பர்களுக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு மிகச்சிறந்த நல்வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீங்கள் உங்கள் ஆழ்மனது விரும்பும் படிப்பை தேர்ந்தெடுத்து படித்து உங்களுக்கான எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கி கொள்ளுங்கள். அதுபோல், சிலருக்கு இந்த தேர்வு முடிவு மன மகிழ்ச்சியை அளித்திருக்காது. அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு தேர்வு, ஒருவரை யார் என்று சொல்லிவிடாது. எதிர்காலத்தில் பல வெற்றிகளை நீங்கள் அடையலாம்.
பத்தாம் வகுப்பு
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மேற்கூறிய இணையதளத்தில் மதியம் 2 மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.21 சதவீதம், மாணவர்கள் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 20,93,978 பேரில் 19,76,668 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவனந்தபுரம் மண்டல மாணவர்கள் 99.68 சதவீதம், பெங்களூரு மண்டல மாணவர்கள் 99.22 சதவீதம், சென்னை மண்டல மாணவர்கள் 98,97 சதவீதம், அஜ்மீர் மண்டல மாணவர்கள் 98.14 சதவீதம், பாட்னா மண்டல மாணவர்கள் 97.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ள கவுகாத்தி மண்டலம் 82.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 64,908 மாணவர்கள் 95 சதவீதத்திற்கு மேலும், 2,36,993 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
,,,,