மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிள்ள அப்பர்பவானி, காட்டு குப்பை, பார்சன்ஸ்வேலி, மரவ கண்டி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குந்தா மற்றும் பைக்காரா மின் வட்டத்திற்கு உட்பட்ட அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, பார்சன்ஸ்வேலி, மாயார் உள்ளிட்ட அணைகளுக்கு, இன்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 250 கன அடி முதல், 300 கன அடி வரை அணைக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.
அணைகள் திறப்பு?
குந்தா, பைக்காரா ஆகிய மின் வட்டத்தின் கீழ், 12 மின் நிலையம், 13 அணைகள் உள்ளன. இன்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அணைகளுக்கு, வினாடிக்கு, 300 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கெத்தை அணை 156 அடியில் 155.5 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல், கோவை மாவட்டம் பில்லூர் அணையும், 100 அடியை எட்டியுள்ளது. மேற்கண்ட மூன்று அணைகளின் பாதுகாப்பு கருதி எந்நேரத்திலும் அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட இருப்பதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை, 6:00 மணி நிலவரப்படி நீலகிரி அணைகளில் தண்ணீர் இருப்பு நிலவரம் :
அணை - மொத்த உயரம்- நீர்மட்டம்
1 முக்குறுத்தி-18-16.5
2. பைக்காரா-100-70
3. சாண்டி நல்லா-49- 40
4. கிளன் மார்கன்-33-30.5
5. மாயார்-17-16.5
6. அப்பர் பவானி-210-185
7. பார்சன்ஸ்வேலி -77- 65
8. போர்த்தி மந்து -130-115
9. அவலாஞ்சி -171-110
10. எமரால்டு-184- 105. 5
11. குந்தா-89-88. 5
12. கெத்தை-156- 155.5
13. பில்லூர்-100-100.
இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரியில் ஊட்டி, குந்த, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுகா பகுதிகளில் நேற்றிரவும் விடிய விடிய மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமானது. இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியது. இதையடுத்து மேற்கண்ட நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அறிவித்து நீலகிரி கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள் கண்காணிப்பு
நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பந்தலூர் பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் நீர் ஊற்று அதிகரித்துள்ளது. கிணறுகள் மறும் நீர் குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் கபினியின் கிளை நதியான பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஆறு சில இடங்களில் அகலப்படுத்தப்பட்டுள்ளதால், சாலை மற்றும் கிராமங்களில் மழை வெள்ள சேதம் தடுக்கப்பட்டுள்ளது. எனினும் தாசில்தார் நடேசன், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், டி.எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
நிவாரண முகாமில் ஒன்பது பேர்
நேற்று, இரவு கோழிக்கோடு சாலை பால்மேடு பகுதியில், மரம் சாய்ந்தது. தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர் அதனை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். தமிழக, கேரளா, கர்நாடகா இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்த நிலையில் , கோழிப்பாலம், அருகே வசிக்கும் மூன்று பழங்குடியினர் குடும்பங்களை சேர்ந்த ஒன்பது பேரை, வருவாய் துறையினர், முன்னெச்சரிக்கையாக நேற்று, இரவு மீட்டு, கோழிப்பாலம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளளனர்.
மழையில் சேதமடைந்த ஆறு வீடுகளை, வருவாய் துறையினர் ஆய்வு செய்து, நிவாரண உதவிகள் வழங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் , அதிகபட்சமாக கூடலூரில் 227 மி.மீ., மழை பெய்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!