Load Image
Advertisement

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொலை!: சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி

முழு விபரம்:

 ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே  சுட்டுக் கொலை!: சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி
ADVERTISEMENT
நரா: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67, சாலையில் நின்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கிழக்காசிய நாடான ஜப்பானில், பார்லிமென்ட் மேல்சபை தேர்தல் நாளை நடக்கிறது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவருமான ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானில் உள்ள நரா என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய சென்றார். அங்கிருந்த ரயில் நிலையம் வெளியே சாலையில் நின்றபடி பிரசாரம் செய்ய துவங்கினார். அவரது பேச்சை கேட்க மிக சிறிய கூட்டம் கூடியது. அவர் ஆவேசமாக கையை உயர்த்தியபடி பேச்சை துவங்கினார்.


சில நிமிடங்களில், இருமுறை துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. பேசிக்கொண்டு இருந்த முன்னாள் பிரதமர் அபே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சாலையில் சுருண்டு விழுந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்து கொண்டனர். அங்கு என்ன நடக்கிறது என்பது அங்கு கூடி இருந்தவர்களுக்கு புரியவில்லை. வெள்ளை நிற சட்டையும், நீல நிற கோட்டும் அணிந்திருந்த ஷின்சோ அபேவின் ஆடை ரத்த சகதியானது. உடனடியாக அவர், 'ஏர் ஆம்புலன்ஸ்' வாயிலாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


Latest Tamil News

ஷின்சோ அபே சுடப்பட்ட உடனேயே, அவருக்கு பின்னால் சற்று தொலைவில், 'கிரே' நிற பனியன் அணிந்து நடைபாதையில் தலை குனிந்தபடி நின்றிருந்த நபரை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவர் அருகே நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷின்சோ அபேவை சுட்டதை ஒப்புக் கொண்டார். நரா நகரத்தைச் சேர்ந்த டெட்சுயா யாமாகாமி, 41, என்ற அந்த நபர், ஷின்சோ அபே மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக மட்டும் தெரிவித்தார்.கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவர், ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையில், 2005 வரை பணியாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரசாரத்தை ரத்து செய்து உடனடியாக டோக்கியோ திரும்பினார்.


''ஷின்சோ அபேவுக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் இந்த சம்பவம் நடந்துள்ளதை அடுத்து, தலைவர்களின் பாதுகாப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்,'' என, பிரதமர் கிஷிடா தெரிவித்தார். அபே சுட்டுக் கொல்லப்பட்டது சர்வ தேச நாடுகளின் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News



மோடி இரங்கல்

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:அருமை நண்பர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கும், ஜப்பான் நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.அபேவின் மறைவையொட்டி, நாடு முழுவதும் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கவும், தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடவும், அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.




டாக்டர் விளக்கம்

ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப் பட்டதும், நரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அது குறித்து அவசர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் புகுஷிமா கூறியதாவது:அபேவின் இதயம் மற்றும் கழுத்தின் இரண்டு பகுதிகளில் குண்டு காயம் இருந்தது. கழுத்தில் ஏற்பட்ட காயத்தால், அவரது ரத்த நாளம் சேதம் அடைந்து அதிக ரத்தம் வெளியேறியது. அவரது இதயமும், நுரையீரலும் செயல் இழந்து இருந்தன. அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்தும் பலன் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.




நீண்ட கால பிரதமர்



ஜப்பானின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷின்சோ அபே. இவரது தாத்தா நொபுசுகே கிஷி, முன்னாள் பிரதமராக பதவி வகித்தார்.தன் தாத்தாவின் வழியை பின்பற்றி அரசியலுக்கு வந்தவர், தன் 52வது வயதில் ஜப்பானின் மிக இளவயது பிரதமராக 2006ல் பொறுப்பேற்றார்.ஒரு ஆண்டுக்குள் அவரது அமைச்சரவை மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஒரே ஆண்டில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின், 2012 - 20 வரையிலான காலகட்டத்தில் மீண்டும் பிரதமர் பதவி வகித்தார். ஜப்பானில் அதிக ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமை உடையவர்.




கடுமையான சட்டம்

துப்பாக்கி வைத்திருப்பதற்கு உலகிலேயே கடுமையான சட்ட திட்டங்கள் பின்பற்றப்படும் நாடு ஜப்பான் தான். இங்கு, 13 கோடி மக்கள் வசிக்கின்றனர்.ஜப்பான் குடியுரிமை பெற்ற ஒருவர், தன் பயன்பாட்டுக்காக துப்பாக்கி வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு உரிமம் பெறுவதற்கு, கெடுபிடியான பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அவ்வளவு எளிதாக துப்பாக்கி உரிமம் பெற்று விட முடியாது. துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை உலகிலேயே முதலில் அறிமுகப்படுத்திய நாடு ஜப்பான் தான்.இங்கு ஒவ்வொரு அரசும் புதிதாக பதவியேற்கும்போது, துப்பாக்கி பயன்பாடு தொடர்பான சட்டம் மேலும் கடுமையாக்கப்படுவது வழக்கம்.துப்பாக்கி பயன்படுத்துவதற்கு இவ்வளவு கெடுபிடி உள்ள நாட்டில், முன்னாள் பிரதமர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.



உருக்கமான உரை

கடந்த 2020ல் அபே, தன் பதவியை ராஜினாமா செய்தபோது நிகழ்த்திய உரை, மிகவும் உருக்கமானது. 'மக்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்வதற்கு, என் உடல்நிலை இடம் அளிக்கவில்லை.பிரதமருக்கான பணியை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை, என் உடல் நிலை எனக்கு அளிக்கவில்லை. இதனால் ராஜினாமா செய்கிறேன்' என்றார்.




ஒரு நாள் துக்கம்


அபேவின் மறைவையொட்டி, நாடு முழுவதும் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கவும், தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடவும், அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும், நம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



வாசகர் கருத்து (36)

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    மிக சிறந்த உலக தலைவரை திரு. ஷின்சோ அபே, குவாட் கூட்டணியை வலுப்படுத்தியவர், சிறந்த இராஜதந்திரி, நம் நாட்டின் சிறந்த நண்பர், அவரது இழப்பு மிகபெரிய வருத்தத்தை தருகிறது. ஓம் சாந்தி.

  • sivakumar - chennai,இந்தியா

    சீன சதி

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    இஷ்டத்துக்கு பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கத்தை பற்றி ஒரு கவலையும் படாத தலைவர்களுக்கு பீதியாகத் தான் இருக்கும்.

  • P.MANIMARAN - keeranur,இந்தியா

    இது கண்டிக்க தக்கது

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    தீவிரவாதிகளை கண்டு பிடித்து சுட்டு கொண்டே இருக்க வேண்டும்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்