ADVERTISEMENT
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலருமான ஆர்.பி.உதயகுமார்:
ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரை போலவே திறமையாக, பல பிரச்னைகளை பழனிசாமி கையாண்டார். இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த அவர், தன்னை நம்பியவர்களை கைவிடவில்லை. கட்சி, ஆட்சி என, எல்லா சுமைகளையும் தாங்க முன்வந்தார். ஆனால், பன்னீர்செல்வம் அப்படியில்லை. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்ட கால கட்டம் வேறு; இன்றைய சூழல் வேறு. 30 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தை ஆண்ட கட்சியின் தலைவராக இருக்கும் பன்னீர்செல்வம், தீர்க்கமாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அப்படி எடுப்பதில்லை. எந்த ஒரு விஷயத்திலும் உறுதியான முடிவு எடுக்க, ஒற்றை தலைமையால் தான் முடியும். முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவர் கையில் தான் இருக்க வேண்டும். எல்லா விஷயத்திற்கும், இரண்டு பேர் கையெழுத்து போட வேண்டும். இருவரிடமும் ஆலோசனை செய்ய வேண்டும் என்ற நிலையில் தான், அ.தி.மு.க., முடங்கியது. இதை நான்கரை ஆண்டுகளாக, நானே கண் கூடாக பார்த்திருக்கிறேன்.பன்னீர்செல்வத்திடம் பேச்சு நடத்த, நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், ஏதோ ஒரு சக்தி அதற்கு தடையாக இருக்கிறது. அந்த சக்தி தனிநபராகவோ, கட்சி தலைவர்களாகவோ இருக்கலாம்.ஜெயலலிதா மறைந்த உடன், பன்னீர்செல்வத்தை முதல்வராக்க முடிவு எடுத்த போது, நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. அதன்பின், சசிகலா முதல்வராக நினைத்த போதும், நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், 'தர்மயுத்தம்' என்று ஒன்றை துவங்கி, முதன்முறையாக பஞ்சாயத்து இழுத்தது பன்னீர்செல்வம் தான். பன்னீர்செல்வம் தன் அதிகாரத்துக்கோ, பதவிக்கோ, செல்வாக்குக்கோ பின்னடைவு என்று நினைத்தால், உடனே 'அமைதி' யுத்தத்தை துவங்குவார். அதேநேரத்தில், தி.மு.க.,வை எதிர்க்கும் நிலை வரும் போதெல்லாம் பின்வாங்குகிறார். ஆனால், தி.மு.க., எதிர்ப்பில், பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதுதானே, அ.தி.மு.க.,வின் அடிப்படை. இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பிருப்பதாக, பன்னீர் தரப்பு கூறுகிறது. அதுதான், எங்கள் கொந்தளிப்புக்கு காரணமே. ஏற்கனவே சின்னத்தை முடக்கிய கசப்பான அனுபவம் இருக்கும் நிலையில், இதுபோன்று பேசுவது நல்லதல்ல. இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. பெரும்பான்மை நிர்வாகிகளின் கருத்தை பரிசீலனை செய்வதாக பன்னீர் கூறினால், கட்சியில் அவருக்குரிய மதிப்பு, மரியாதை கிடைக்கும். வரும், 11ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. நன்றாக யோசித்து நல்ல முடிவை எடுக்கட்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இப்படித்தான் இருக்க போகுறீர்களா.