Load Image
dinamalar telegram
Advertisement

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு; விசாரணை உத்தரவில் குறுக்கிட மறுப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை : முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறைகேடு தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரிக்க பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.கடந்த 2020 - 21ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பில், தனியார் மருத்துவக் கல்லுாரியில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 113 காலியிடங்களில், இறுதிகட்ட கவுன்சிலிங் நடத்தாமல் 90 இடங்கள் நிரப்பப்பட்டன.


13 தனியார் கல்லுாரிகளில், இவ்வாறு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இதனால், 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த டாக்டர் கீதாஞ்சலிக்கு, விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மற்றொரு டாக்டரும் வழக்கு தொடர்ந்தார்.மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி குறைவானவர்களை முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளனர் என்பதால், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டது.
Latest Tamil News

சி.பி.சி.ஐ.டி., அறிக்கையை பரிசீலித்த பின், நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:தேர்வுக்குழுவின் செயலராக பதவி வகித்த டாக்டர் ஜி.செல்வராஜன், அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும், தனியார் மருத்துவ கல்லுாரிகளுடன் கைகோர்த்து செயல்பட்டிருப்பதாகவும், விசாரணை அறிக்கை வெளிப்படுத்துகிறது.எனவே, செல்வராஜன் உட்பட மற்றவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வழக்கு தொடுத்த கீதாஞ்சலி உள்ளிட்ட இருவருக்கு, தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து, செல்வராஜன் மேல்முறையீடு செய்தார். தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜரானார்.இவ்வழக்கில், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு, இறுதிகட்ட கவுன்சிலிங் நடத்த, எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது.


அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு, நான்கு முறை கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அதே வழிமுறையை, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு பின்பற்றவில்லை.முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்பியதில், உரிய நடைமுறை பின்பற்றப்பட்டது என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியவில்லை.


எனவே, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவில், குறுக்கிட தேவையில்லை.மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் போது, இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கு எதிராகவும், குறிப்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் மற்றும் துறையில் அதிகாரிகளாக உள்ளவர்களுக்கு எதிராகவும் எடுக்கப்பட வேண்டும்.


விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், 'பென்ஷன்' தொகையை நிறுத்த முடியாது. எனவே, மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, தலைமை செயலர் உத்தரவிட வேண்டும். ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • Girija - Chennai,இந்தியா

    அதிகார துஷ்ப்ரயோகம் செய்த செயலரை அந்த பதவியில் இருந்து நீக்கி வேறு துறையில் கடலோர பாதுகாப்பு துறை போல, சென்னைக்கு வெளியே பணியில் அமர்த்த வேண்டும். டாக்டர்களின் படிப்பையும் நேரத்தையும் நிம்மதியையும் கெடுத்த இந்த அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் நாற்பது லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும். தேர்வானவர்களின் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு முதலில் இடங்களை வழங்கிவிட்டு , மீதம் உள்ள மாணவர்களைத்தான் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு அனுப்ப வேண்டும். எந்த மாணவரும் குறைந்த செலவில் அரசு கல்லூரியில் படிப்பதை தவிர்த்து தனியார் கல்லூரியில் அதிக பணம் கொடுத்து சேரமாட்டார். தற்போது பின்பற்றப்பட்டு வரும் ஆற்காடு வீராசாமி பார்முலாவை உடனே நிறுத்த வேண்டும் .

  • சீனி - Bangalore,இந்தியா

    கர்நாடகாவில் எஸ்.ஐ தேர்வில் பெரும் மோசடியாகி, 5கோடி வாங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி நேற்று கைதாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மானிலங்களுக்கு அப்பாற்பட்டு, இந்தியாவில் மோசடிக்கு விஞ்ஞான ரீதியில் பல வழிகள் வைத்துள்ளனர். மருத்துவ படிப்புக்கு தேர்வானவர், தனியார், அரசு எந்த கல்லூரியா இருந்தாலும் ஆன்லைனில் ரேங்க் பட்டியல் வெளியிட்டு, 1வாரத்துக்குள் எந்த புகாரும் வரவில்லையெனில் சீட்டை நிரப்பலாமே ? தற்போது தற்காலிக ஆசிரியர் நியமனமும் பேப்பர் மூலம் விண்ணப்பம் கொடுக்கின்றனர், எனவே யார் தகுதியானவர், எத்தனை விண்ணப்பம் குப்பைத்தொட்டிக்கு போகும், என யாருக்கும் தெரியாது. ஒருவர் என்ன காரணத்தால் தேர்வாகவில்லை என யாருக்கும் தெரியாது. ஆன்லைனில் மனு இருந்தால் அனைவர் தகுதியும் தெளிவாக தெரியும், முறையிடவும் வாய்ப்புள்ளது. தகுதிக்கு தகுந்த மதிப்பெண்கள் இருந்து( 5வருட ஆசிரியர் பணி 10மதிப்பெண், முதுகலை 10 மதிப்பெண், இளங்களை 5மதிப்பெண், பி.எட் 5மதிப்பெண், எம்.எட் 10மதிப்பெண் ஆசிரியர் தகுதித்தேர்வில் பாஸ் 10 மதிப்பெண், அதே ஊரில் இருப்பவர் விண்ணப்பம் 10மதிப்பெண், மகளிர் கூடுதல் 5மதிப்பெண் என இருந்தால் எளிதாக ரேங்க் கிடைக்கும் வெளிப்படையா தகுதியானவர்களுக்கு வாய்ப்புகிடைக்கும்), ரேங்க் வெளியிட்டால், உண்மை தெரியவரும். பேப்பர் விண்ணப்பங்கள், அறிவிப்பு செய்யாமல் சீட் நிரப்புவது எல்லாமே திராவிட மாமன் மச்சான்கள், கப்பம் கட்டுபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு, எனவே கோர்ட் தலையிட்டு உயர்படிப்பு, வேலைவாய்ப்பு எல்லாவற்றுக்கும் ஆன்லைனில் விண்ணப்பம் முதல், தேர்வானவர், தேர்வாகாதவர் என ரேங்க் பட்டியல் வெளிப்படையாக ஆன்லைனில் வெளியிட உத்தரவு பிறப்பிகவேண்டும். இல்லையெனில் எல்லாமே மோசடியாக தான் நடைபெறுகிறது என்பது உண்மை.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்