முதலீட்டாளர் மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! 95,000 பேருக்கு வேலை வாய்ப்பு

வளர்ச்சி
ஆட்சிக்கு வந்த ஓராண்டில் இமாலய சாதனை அடைந்துள்ளோம். இதற்கு முழுமுதல் காரணம் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுதான்.கடந்த காலத்தில் மிக மிக தொய்வாக இருந்த இந்த துறையை மீட்டெடுக்க, ஆர்வமான, திறமையான, துடிப்பான, பல்வேறு முயற்சிகளை துணிச்சலாக செய்யக் கூடிய தங்கம் தென்னரசு இருந்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்து, அவரை தேர்வு செய்தேன்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, இதுவரை ஐந்து முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் இரண்டு; கோவை மற்றும் துாத்துக்குடியில் தலா ஒன்று; துபாயில் ஒரு மாநாடு நடந்துள்ளது. இது, ஆறாவது மாநாடு.அனைவருக்குமான வளர்ச்சி; அனைத்து துறை வளர்ச்சி; அனைத்து மாவட்ட வளர்ச்சி மற்றும் அனைத்து சமூக வளர்ச்சி; அமைதி; நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தமிழகத்தை நோக்கி, இந்திய மற்றும் உலக நிறுவனங்கள் வரத் துவங்கி உள்ளன.
மாநாட்டு இலக்கு
தமிழக பொருளாதாரத்தை, 79 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதோடு, தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும்.உலகத்தின் மூலை முடுக்கெல்லாம், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சென்றடைய வேண்டும். மாநிலம் முழுதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் வாயிலாக, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே, இந்த மாநாட்டின் இலக்கு.
இந்த இலக்குகளை அடைய, தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் மீது அபார நம்பிக்கை வைத்து, தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.தொழில் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகள், அனுமதிகளை பெறவும், உங்கள் தொழில் சிறப்பாக நடைபெறவும், தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என, உறுதி அளிக்கிறேன்.வளர்ந்து வரும் நிதி சேவைகள் துறையின் ஆதரவுடன், உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத் துறையை தமிழக அரசு கொண்டுள்ளது.இதற்காக, 'தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை - 2021' ஏற்கெனவே வெளி யிடப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சர் தலைமையில், ஒரு நிதிநுட்ப ஆட்சி மன்றக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, 'டி.என்., -டெக்ஸ்பீரியன்ஸ்' திட்டத்திற்கான இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் வாயிலாக, தொழில்நுட்ப சேவைகள், ஒரே குடையின் கீழ் அளிக்கப்படும். இதற்கான இணைய அறிவு சக்தி உருவாக்கப்பட்டு வருகிறது.'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், சென்னையில் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்ட, ஒரு நிதி நுட்ப நகரத்தை படிப்படியாக உருவாக்க உள்ளது.இதன் வாயிலாக, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான நிதி சேவைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளின் மையமாக, இந்த நிதிநுட்ப நகரம் செயல்படும்.
'ஸ்மார்ட்' மாநிலம்!
தமிழகத்தில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கவும், தமிழகத்தில் உள்ள புத்தொழில் சூழலை, தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும், 'தமிழ்நாடு நிதிநுட்ப முதலீட்டுக் கள விழா' துவக்கி வைக்கப்பட்டுள்ளது.உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், தமிழகத்தை ஒரு, 'ஸ்மார்ட்' மாநிலமாக உருவாக்குவது தான், இந்த அரசின் இலக்கு.முதலீட்டாளர் மாநாட்டில், 11 நிதிநுட்ப திட்டங்களுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிதிநுட்ப ஊக்குவிப்பு சலுகை, இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.'உயிர் அறிவியல் கொள்கை - 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை - 2022' ஆகிய புதிய கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, முதலீடுகளை ஈர்க்கும் வரையறையை, மேலும் நீட்டித்துக் கொள்ள முடியும்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஓராண்டில், இதுவரை 2.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
2021ல் ஈர்த்த முதலீடுகளை விட, நடப்பு ஆண்டு 1.50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, இரு மடங்கு முதலீடுகளை ஈர்க்க, தொழில்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.அதற்கேற்ப, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்தால், இதுவரை 2.25 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டை விட, 2.5 மடங்கு அதிகம்.எதிர்கால எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வளர்ந்து வரும் துறையாக, பசுமை ஹைட்ரஜன் விளங்குகிறது. இதில், ஆக்மே நிறுவனம், 52 ஆயிரத்து 695 கோடி ரூபாய் முதலீட்டில், துாத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தி திட்டத்தை அமைக்க உள்ளது. இந்த திட்டம் துாத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
தென் மாவட்டங்களில்...
மாநாட்டில், 1 லட்சத்து 25 ஆயிரத்து 244 கோடி ரூபாய் மதிப்பில், 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 74 ஆயிரத்து 898 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவற்றில், 68 சதவீதம் தென் மாவட்டங்களில் அமைய உள்ளன. மேலும், 22 ஆயிரத்து 252 கோடி ரூபாயிலான 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் வாயிலாக, 17 ஆயிரத்து 654 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இந்த 21 திட்டங்களில், 20 திட்டங்கள் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் போடப்பட்ட ஒப்பந்தங்கள். இதே போல, 1,497 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 7,050 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 12 திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதோடு நம் கடமை முடிந்து விடுவதாக, இந்த அரசு இருந்து விடவில்லை. இதனால்தான் ஒப்பந்தங்கள், நிறுவனங்களின் துவக்க விழாவாக மாறி வருகிறது.இதுவரை நடத்தப்பட்ட மாநாட்டில் இதுவே மிகப் பெரிய மாநாடு.

வாசகர் கருத்து (13)
தீயமுக ஆட்சியில் அனுமதி கொடுத்துவிட்டு தீயமுக ஆட்சியை விட்டு அகற்றப்பட்டவுடன் சுற்றுச்சூழல் பாதிப்பென போராடி மூடிவிடுவார்கள். அப்புறம் அந்த கம்பெனிகளில் பணியாற்றியவர்களின் கதி அவ்வளவுதான்
இந்த உணர்வு விவகாரம் தான் திராவிட மாடளின் முக்கிய கொள்கை. மொழி, இனம், சமூக நீதி இந்த உணர்வு கோழம் தான் இவர்களுக்கு பிரதானம்.
@அப்புசாமி, பக்கோடா விக்கிறது கேவலமா என்ன? நீங்கள் பக்கோடா சாப்பிட்டதில்லையா என்ன? இல்ல சாப்பிடமாடீர்களா என்ன? கேவலமான தொழிலா? உழைச்சு சாப்பிடணும்.... எந்த தொழிலானாலும் மரியாதை வேணும்...
ஒரு ஒரே ஒரு குடும்பம் செழிப்பதற்கு நீங்களும், பறைசாற்றும் மீடியாவும் எப்போ முட்டுக்கொடுப்பதை நிறுத்தபோகிறார்கள்? அப்படியே, தமிழ்நாட்டு பிஜேபி குற்றம் சாற்றுவது பொய்யானால் ஏன் இன்னும் வழக்கு தொடுத்து உள்ளே தல்லவில்லை? கோர்ட், போலீஸ், மீடியா எல்லாமும் தீமுகா வசம்தானே?
வேலை வாய்ப்பின்மை 7.8 சதவீதம் ஆயிடுச்சாம்.சீக்கிரம் ரெண்டு கோடி வழங்குங்க தளபதி. பிரதமருக்கு அடுத்த படியா நீங்கதான் அதிக வேலைவாய்ப்பு உருவாக்குறீங்க.