அரசியல் தந்திரங்களை வகுப்பதில் பா.ஜ., சாமர்த்தியம்; மாநிலங்களில் ஆட்சி அமைப்பதில் அதிரடி

.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் வென்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து, பஞ்சாயத்து தேர்தல் முதல் பார்லிமென்ட் தேர்தல் வரை பா.ஜ., கொடி கட்டி பறக்கிறது. வட மாநிலங்கள் மற்றும் மேற்கே குஜராத்தில் வலுவடைந்த பா.ஜ., அதன்பின் காங்கிரசிடம் இருந்து ஒவ்வொரு மாநிலமாக வென்று வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் அள்ளியுள்ளது.எந்த ஒரு பிரச்னையையும், சாம, பேத, தான, தண்டம் என்ற நான்கு வழிமுறைகளில் சமாளிக்க முடியும். தன் அரசியல் வளர்ச்சியில் பா.ஜ., இதை சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தி வருகிறது.
அரசியல் சாணக்கியர்
போர் என்று வந்துவிட்டால், அதில் அனைத்தும் நியாயமானதே. அதன்படி, காங்கிரஸ் மற்றும் மற்ற பிராந்திய கட்சிகளின் அதிருப்தியாளர்கள் யார் என்பதை சரியாக அடையாளம் காண்பது, பா.ஜ.,வின் அரசியல் தந்திரமாகும். எந்த ஒரு நிறுவனமும், அரசியல் கட்சிகளும், தங்களுடைய வளர்ச்சியை இரண்டு வகைகளில் பெற முடியும். அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவது ஒரு வழி. கையகப்படுத்தி, விரிவுபடுத்தி வளர்வது மற்றொரு வழி.பிரதமர் நரேந்திர மோடியின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவரும், 'அரசியல் சாணக்கியர்' என்று மாற்றுக் கட்சியினரே பாராட்டப்படுபவருமான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தமே இல்லாமல் இந்த காரியத்தை செயல்படுத்தி வருகிறார்.

கடந்த எட்டு ஆண்டுகளில், பல்வேறு கட்சிகளின் முக்கிய அதிருப்தியாளர்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்கள் வாயிலாக தேர்தல் வெற்றிகளைப் பெற்று தருவதில், அமித் ஷா திறம்பட செயல்பட்டு வருகிறார்.வடகிழக்கு மாநிலமான அசாமில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஹிமந்த பிஸ்வா சர்மா, கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். கடந்த, 2015ல் அவர் பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன், 10 எம்.எல்.ஏ.,க்களும் வந்தனர். இதன் பின், அசாம் உட்பட அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ.,வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. நீண்ட காலமாக காங்கிரசில் இருந்தவரும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், மத்திய பிரதேச முதல்வராக இருந்த கமல்நாத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போர்க் கொடி
இதை காங்கிரஸ் தலைமை சரியாக கையாளவில்லை. இதையடுத்து சிந்தியா, 22 எம்.எல்.ஏ.,க்களுடன் போர்க் கொடி துாக்கினார்.சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்ட பா.ஜ., அவருக்கு அழைப்பு விடுத்தது. அங்கு ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது.மஹாராஷ்டிராவில், பா.ஜ., மற்றும் சிவசேனா இடையே மிக நீண்ட நட்பு கூட்டணி இருந்தது. கடந்த, 2019ல் முதல்வர் பதவிக்கான போட்டியில் இந்தக் கூட்டணி முறிந்தது. அதற்கு முன், இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்து இருந்தன. அப்போது, பா.ஜ.,வுடன் பேசுவதற்காக தன் கட்சியின் பிரதிநிதியாக சுபாஷ் தேசாயை அறிவித்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.இதனால், மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே கடும் அதிருப்தியில் இருந்தார். அதை புரிந்து கொண்ட பா.ஜ., அவருடன் நெருக்கமாக பழகி வந்தது.
இதையடுத்து சிவசேனா தலைமைக்கு எதிராக 37 எம்.எல்.ஏ.,க்களுடன் ஷிண்டே போர்க் கொடி துாக்கினார். இதனால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - அதிருப்தி மற்றும் பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது, அதில் உள்ள அதிருப்தியாளர்களை வளைத்து, பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. கோவாவிலும், 2019ல் எதிர்க்கட்சியில் இருந்த, 15 எம்.எல்.ஏ.,க்களில், 10 பேர், பா.ஜ.,வில் இணைந்தனர். அங்கு, பா.ஜ., ஆட்சி உறுதியுடன் தொடர்கிறது. இவ்வாறு மற்றக் கட்சிகளில் உள்ள திறமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பிரச்னை ஏற்படும்போது தங்கள் கட்சியில் சேர்த்து ஆட்சியை கைப்பற்றும் அரசியல் தந்திரத்தை பா.ஜ., தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர் கருத்து (8)
இந்த அசிங்கத்திற்கு பெயர் சாமர்த்தியாமா?
இங்கேயும் அரசியல் சாணக்கியர் என்று தன்னை தானே கூறிக்கொண்டு ஒரு முதல்வர் இருந்தார். அவரது குடும்ப கொத்தடிமை அல்லக்கைகள் இங்கே வந்து பாஜகவை சாடும் பாருங்கள்.
இதற்க்கு பெயர் அரசியல் தந்திரம் அல்ல அரசியல் அடாவடி நயவஞ்சகம் அரசியல் பித்தலாட்டம்
ஊர்ல இதுக்கு பேரு "வேற" என்று பேசிக் கொள்கிறார்கள்
இந்த பொழப்புக்கு.......